உள்நாட்டு விமானப் பயண சேவைகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்: ஏ.எம்.ஜௌபர்
இலங்கை, பிராந்திய நாடுகளுடன் திறம்பட போட்டியிட உள்நாட்டு விமானப் பயண சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை, சுற்றுலா மற்றும் தொழில்துறை சம்மேளனம் (Chamber of tourism ) வலியுறுத்துகிறது.
நாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை விரிவுபடுத்துவதையும் மேம்படுத்துவதையும், தாமதப்படுத்துவது, சுற்றுலாத் துறை அதன் முழு திறனை அடைவதை, மேலும் கடினமாக்கும் என்று அந்த கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி உள்நாட்டு விமானப் பயணத்தை வழங்கும் நிறுவனங்களின் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் சுற்றுலாத் துறை அண்மைக் காலங்களில் சரிவைச் சந்தித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவை
இந்தநிலையில் அதிகமான விமான நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது, தற்போது அவசரத் தேவையாக உள்ளது என்று சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை
ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இதுவரை தீவிர முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இதனால்
ஒட்டுமொத்த சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, சிகிரியா, கொக்கல, சீனக்குடா மற்றும் மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்தும் பணியை ஆரம்பிக்குமாறு சம்மேளனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளது.
அத்துடன் வீரவில,
மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் விமான நிலைய வளாகங்களில் பறக்கும் பயிற்சிப்
பள்ளிகள் நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தையும் தமது சம்மேளனம்
வலியுறுத்தியுள்ளதாக ஏ.எம்.ஜௌபர் தெரிவித்துள்ளார்.