சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டும் - ஆளும் கட்சி
சமூக ஊடகங்கள் மூலமாக தற்போது மிகவும் பொய்யான மற்றும் குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதால், சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம்(Sagara kariyawasam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமூக ஊடகங்கள் வழியாக தற்போது மிகவும் தவறான மற்றும் குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். எனினும் இந்த சமூக ஊடகங்கள் சம்பந்தமான எவ்வித சட்ட வரையறைகளும் இல்லை. இளம் தலைமுறையினரின் பிரதான செய்தி ஊடகமாக சமூக ஊடகங்கள் உள்ளன.
இளம் தலைமுறையினர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதிலிருந்து விலகி இருக்கும் தரப்பினர். அவர்கள் தகவல்களைப் பெறும் பிரதான ஊடகமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்படுவதை, நாட்டுக்கு கேடு விளைவிக்கும், நாட்டின் ஸ்திரத்தன்மை இல்லாமல் செய்யும் தரப்பினர் தமக்கான சிறந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர், நாட்டை மிகப் பெரியளவில் அபிவிருத்தி செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksa) எதிராகக் கடந்த காலங்களில் சமூக ஊடகங்கள் எப்படி செய்யப்பட்டன என்பதை நாங்கள் அறிவோம்.
தற்போதும் அதே நிலைமை சமூக ஊடகங்களில் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நான் சமூக ஊடகங்களைத் தடை செய்யுமாறு கூறவில்லை. அவற்றில் வெளியாகும் தகவல்களின் உண்மை மற்றும் பொய்களை ஆராய்ந்தும், அந்த தகவல்கள் அடங்கிய விடம் சம்பந்தமாக ஏதோ ஒரு நிறுவனத்தின் மூலமாக அந்த தகவல்களைச் சரி செய்து, கட்டுப்படுத்த முடியுமாயின் அது நாட்டுக்குச் செய்யும் நன்மை என்பதுடன் உதவியாக இருக்கும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
