வவுனியாவில் போதைப்பொருளுடன் கடற்படை சிப்பாய் கைது
புதிய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் ஒருவரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி குறித்த பேருந்தினை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தினர்.
இதன் போது ஐந்தாக பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதனை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பேருந்தில் பயணித்த கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள்
மேலும் குறித்த கடற்படை சிப்பாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் முழங்காவிலில் உள்ள முகாமில் பணியாற்றிவரும் 27வயதுடைய நபர் எனவும் தெரியவந்துள்ளது.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவினையும், சந்தேகநபரையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |