இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும்
ஈழத்தமிழர் அரசியலில் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் அரசியலையும், அறிவியலையும் தத்துவ மயப்படுத்தப்பட வேண்டிய தேவை உணரப்படத் தொடங்கிவிட்டது. ஆனாலும் அதற்கான முன்னெடுப்புகள் முனைப்புப் பெறவில்லை.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் அரசியலையும் அறிவியலையும் தத்துவ விசாரணைக்கு உட்படுத்துவது அவசியமானது. தத்துவ விசாரணைகளினுாடாக உட்பொருட்களை கண்டறிய வேண்டும்.ஆய்வு என்பது காலத்தை முந்தும் செயலும், அது காலத்தை உந்தும் செயலுமாகும். எனவே இயற்கை விதிகளில் இருந்தே அரசியலையும், வாழ்வியலையும் நெறிப்படுத்த வேண்டும்.
இலங்கைத்தீவில் தமிழர்களை நூற்றாண்டுகால அரசியல் தோல்விகளிலிருந்து மீட்பதற்கு தத்துவ விசாரணைகளும், ஆய்வுகளும் அவசியமானது என்பதை வலியுறுத்துவதற்கான தேடலாகவே இப்பந்தி அமைகிறது.
வன்னியில் யுத்த மேகம்
வரலாறு விஞ்ஞானபூர்வமானது. அதில் நபர்களும், கணங்களும் சில வேளைகளில் சந்திப்பு புள்ளிகளாய் அமைந்திடக் கூடும். மொத்தத்தில் வரலாறானது நீண்ட நெடுங்கால வளர்ச்சிப் போக்கையும், திரள் திரளாகத் திரண்ட மனித ஆற்றலையும் கொண்டு இயங்கும் முதுபெரும் தர்க்கபூர்வ போக்கை கொண்ட ஒரு சக்தியாகும்."" என்றும் ""வரலாற்றில் தனி நபர்களுக்கென ஓர் எல்லைக்குட்பட்ட பாத்திரம் உண்டு.
அத்தகையதொரு பாத்திரம் இருக்கின்றது என்பதற்காக எத்தகைய சூராதி சூரனாலும் தனித்து நின்று எதனையும் சாதித்திட முடியாது. மக்கள் திரட்சியைக் கொண்டுதான் அதனையும் சாதித்திட முடியும். எத்தகையவனானாலும் வெறும் மனோவேகத்தைக் கொண்டு எதனையும் படைத்திட முடியாது. காணப்படும் வரலாற்று வாய்ப்புக்களில் இருந்துதான் அதைக்கூட செய்திட முடியும்"" என 2007ல் வன்னியில் யுத்த மேகம் சூழ்ந்த வேளை கிளிநொச்சியிலிருந்து மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய "ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்"- என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அரசியல் தத்துவம் /மெய்யியல்(Political philosophy) என்றால் என்ன? எல்லா அரசியல் செயற்பாடுகளிலும் உள்ள உள்ளார்ந்த உண்மைகளை கண்டறிதலே அரசியல் தத்துவமகும். இந்த உண்மைகளை கட்புல பார்வைகளுக்கு அப்பால் கட்புலனுக்கு தெரியாத உள்ளார்ந்த உண்மைகளை தேடுவதாகும்.
ஒரு செயற்பாடு தரவல்ல விளைவுகளையும், அந்த விளைவுகளினால் ஏற்படும் தொடர் விளைவுகளையும்(Consequence) கணிப்பீடு செய்வதும், அளவீடு செய்வதுமே தத்துவத்தக் கண்ணோட்டமாகும் இத்தகைய தத்துவத்த கண்ணோட்டத்துடனேயே ஈழத்தமிழர்களுடைய அரசியலையும், அரசியல் முன்னெடுப்புக்களை அணுகவேண்டும்.
தத்துவார்த்த ஆய்வு முறைகளுக்கு ஊடான அறிவியல் முடிவுகளின் அடிப்படையிலேயே ஈழத்தமிழருடைய அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே வெற்றிக்கான பாதையின் திறப்புகோளாக அமையும். இதனாலேதான் ஈழத்தமிழர் அரசியலுக்கு தத்துவார்த்த கண்ணோட்டம் வேண்டும் என பலராலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. ஆனாலும் அந்தக் கருத்துக்களை அறிவார்ந்து அறிந்து கொள்வதற்கான அறிவியல்த் தேடலோ, அறிவியல் நாட்டமோ, அதற்கான தகுதியை நிலையிலோ ஈழத் தமிழர்கள் தற்போது இல்லை என்பதும் துரதிஸ்டமே.
இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பில் அல்லது தோற்றத்தில் உயிரிகளின் பிறப்பு, இறப்பு என்ற இரண்டுமே பொருட்களின் சேர்க்கையாலும், பிரிவாலும் நிகழ்கின்றன. ஆணும் பெண்ணும் சேர்வதால் அல்லது இருவேறுபட்ட கலன்களினுள்ள கவர்ச்சியின் விளைவால் ஏற்படும் சேர்க்கையால் பிறப்பு நிகழ்கிறது. அவ்வாறு சேர்க்கையால் பிறந்த உயிரியின் உடற்கலன்களின் வேதிப்பொருள் அதாவது கார்பன் பிரிவதால் இறப்பு நிகழ்கின்றது.
இவ்வாறுதான் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சேர்கின்றபோது சில இடங்களில் தற்காலிக பிரிதல்கள் (விட்டுக் கொடுப்புகளும்) அழிதல் (இழப்பு) ஏற்படும். இதுவே பௌதீக இயல்பு என்கிறது விஞ்ஞாம். அதுவே தத்துவார்த்த உண்மையுமாகும். நாம் காணும் பிரபஞ்சத்தின் பூமியும், சூரியனும் ஏனைய கோள்களும், வளிமண்டலமும் பௌதீகவியலில் பொருட்களாகவே பார்க்கப்படுகிறது.
இயற்கை விதியில் இந்தப் பொருள்கள் யாவுமே தம்மிடையே ஈர்ப்பு கொண்டவை என்பதனாலேயே பிரபஞ்சமாக நிலைத்திருக்கின்றது. பிரபஞ்சத்தில் வாழும் உயிர்களும் தேவைகளை, விருப்புக்களை, ஈர்ப்புகளை கொண்டுள்ளன என்பது மட்டுமல்ல அவை ஒன்றையென்று தங்கியும் உள்ளன. ஜடப் பொருட்களுக்கு விருப்பங்களும், தேவையும் இல்லை. அவற்றுக்கு ஈர்ப்பு மாத்திரமே உண்டு. ஈர்ப்பினால்தான் ஒன்றோடு ஒன்று இணைகின்றன.
அது உயிரிகள் இணை செய்வதாயினும் சரி அல்லது அரசியலில் தம்மை பலப்படுத்த கூட்டிணைவதாயினும் சரி அங்கு ஈர்ப்பு இருக்க வேண்டும். ஒன்றை ஒன்று தங்கிவாழ்வது தவிர்க்க முடியாத இயற்கை நியதி. பூமி ஈர்ப்பு சக்தியை கொண்டுள்ளது அது தன்னிலிருந்து 100 கிலோமீட்டர்களுக்கு உட்பட்ட பொருட்களை ஈர்த்து தன்னுள்அடக்கும் சக்தியை கொண்டுள்ளது. ஆகவே உலகின் மிக கொடூரமான சர்வாதிகாரி பூமிதான். இதனாலேயே பூமியின் வேகத்திற்கு ஏற்ப பூமியில் உள்ள பொருள்களும் நகர்கின்றன. இதனை பூமியில் உள்ள பொருள்கள் அறிவதில்லை.
இயற்கை
இவ்வாறுதான் அரசியல் அதிகாரத்தின் முன்னும், அரசியல் தலைவர்களின் ஈர்ப்பின் முன்னும், கவர்சீகரமான கொள்கைகள், கோசங்கள் முன்னும் மக்களும், மக்கள் கட்டமைப்புகளும் ஈர்க்கப்பட்டு சுழற்றப்படுகின்றன. அந்த ஈர்ப்பிற்கான காரணங்காரியங்களை கண்டறிந்து அதன் சாதக பாதக தன்மைகளை உய்த்தறியும் ஞானமே அரசியல் தத்துவஞானம் ஆகும். அந்த ஈர்ப்பின் உண்மையை கண்டறிவதன் ஊடாக புதிய அரசியல் கோட்பாட்டையும், புதிய போக்கையும் அரசியலில் ஏற்படுத்திட முடியும்.
அந்த ஏற்பாடும் வரையறைக்குப் பட்டதாகவும், இயற்கை விதிகளுக்கு உட்பட்டதாகவுமே மாற்றியமைத்திட முடியும். இயற்கையில்(Nature) எம்மிடம் என்ன இருக்கின்றதோ அதிலிருந்துதான் எதனையும் படைத்திட முடியும். இயற்கையில் இல்லாத ஒன்றை மனிதனால் படைத்திட முடியாது. இயற்கையில் உள்ள பொருட்களில் இருந்தே மனிதன் பிரித்தல், இணைத்தல் என்ற இரண்டு செயற்பாடுகளுக்கூடாகவே பண்டங்களை படைத்திடுகிறான், செயற்பாடுகளை வெற்றிகரமாக சாதித்து காட்டுகிறான். ஆகவே இந்த பூமியில் இருக்கின்ற இயற்கை பொருட்களில் இருந்தே எதனையும் படைத்திட முடியும்.
இங்கே பொருள்கள் என்ற வகைக்குள் தின்மம், திரவம், வாயு மாத்திரமல்ல மனிதன் உள்ளிட்ட உயிரிகளையும் பொருட்கள் என்ற வகுதிக்குள்ளேயே பௌதீகவிஞ்ஞானம் அடக்குகிறது. அதனையே தத்துவமும் உரைக்கிறது. இதனை இந்து தத்துவவியலில் சற்கரியவாதம் ""உள்ளதிலிருந்தே உள்ளது தோன்றும் இல்லதிலிருந்து உள்ளது தோன்றாது"" எனக் குறிப்பிடுகிறது.
இயற்கையில் இல்லாத ஒன்றை புதிதாக மனிதனால் படைத்திட முடியாது. பூமியில் ஏற்கனவே இருக்கின்ற பொருட்களை வைத்துக் கொண்டுதான் எதனையும் சாதித்திட முடியும் இது அரசியலுக்கும் பொருந்தும். ஈழத் தமிழர்களை வரலாறு எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறதோ அங்கிருந்துதான் அதாவது முந்தைய செயற்பாடுகளின் தொடர் வரலாற்று வளர்ச்சி போக்கிலிருந்துதான்(Preceding) அடுத்த கட்ட வரலாற்று பயணத்தை மேற்கொள்ள முடியும்.
வரலாறும், இயற்கையும் எதனை எம்மிடம் தந்திருக்கிறதோ, எது நம்மிடம் இருக்கிறதோ அதிலிருந்துதான் எமக்கான அரசியலை படைத்திட முடியும். வெறுமனே மனவோட்டங்களுக்கும், விருப்புகளுக்கும், கற்பனைகளுக்கும் இடம் கொடுத்து வெறுமையில் இருந்து கொண்டு எந்த சூராதி சூரனாலும் எதனையும் படைத்திட முடியாது.இருப்புத்தான் நிலையை நிர்ணயிக்கும் விருப்பு அல்ல"" என்ற தத்துவார்த்த கூற்று இதனை உணர்த்துகிறது.
ஆகவே இங்கே இயற்கை என்பதை வரையறைக்கு உட்பட்டது. அந்த வரையறைக்கப்பட்ட இருக்கின்றவற்றில் இருந்தே எதனையும் படைக்க முடியும். ஆகவே இருப்பு என்பது நிர்ணயம் செய்யப்பட்டது(Determinism) இதனை நிர்ணயவாதம் அல்லது தீர்மானவாதம் என்கிறது தத்துவவியல். இங்கே இருப்பு என்பது இயற்கை அதாவது இயற்கையில் உள்ள பொருட்கள். இங்கே மனிதனுக்கு சுய விருப்பு (Free will) என்ற ஒன்று கிடையவே கிடையாது.
உலகின் எந்தவொரு அரசியல் தலைவர்களும் சுயவிருப்புடன் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாது. இயற்கையில் இருப்பவற்றிலிருந்து தமக்கு ஏற்றதை தெரிவு செய்யவும், தேர்ந்தெடுக்கவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும். இருப்பின் நிர்பந்தத்தை மனிதன் தனது விருப்பமாக தெரிவு செய்கிறான். இங்கே விருப்பமும், தெரிவும் தரப்பட்டுள்ள அல்லது இருக்கின்ற அடிப்படை நிலைமை அதாவது தரப்பட்டுள்ள எதார்த்தம்(Given reality) என்பதிலேயே தங்கியுள்ளது. ஆகவே இங்கே மனிதனின் விருப்பு என்பது இயற்கையின் விதிக்கும், நிபந்தனைக்கும் உட்பட்டது.
இயற்கையின் விதியினாலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. இயற்கை, நிர்ணயம், முந்தைய தொடர் வளர்ச்சி, சுயவிருப்பு, தரப்பட்டுள்ள எதார்த்தம் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு மனித செயற்பாடுகளையும், அதனால் தோற்றுவிக்கப்படும் கோட்பாடுகளை வழிநடத்தைச் செல்லுகின்ற தர்க்கபூர்வ போக்கின் தொடர் விளைவுகள் இருப்பை தீர்மானிக்கின்றது. தமிழர்களிடமுள்ள இருப்பிலிருந்து இயற்கை விதிகளை விஞ்சி எதனையும் ஈழத்தமிழர்களின் அரசியலில் படைத்திட முடியாது.
இப்போது எம்மிடம் என்ன இருக்கிறதோ, நாம் எங்கு இருக்கிறோமோ அதனடிப்படையில் தான் அடுத்த கட்டச் செயற்பாட்டை தொடர முடியும். ஆகவே இப்போது ஈழத் தமிழர்களின் இருப்பு நிலை என்ன என்பதை பார்க்க வேண்டும். முள்ளிவாய்க்கால் ஏட்பட்ட பெருந்தோல்வி என்பது ஈழத் தமிழர்கள் சுமார் கால் நூற்றாண்டுக்கு மேலாக கட்டி வளர்த்த ஒரு அரை அரசை இழந்துவிட்டனர். தமிழ்த்தேசிய கட்டுமானங்களும், தேசக் கட்டுமானங்களும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் தமிழ் சமூகத்திற்கு இடையே பல்வேறுபட்ட உள்முரண்பாடுகளும் தோற்றம் பெற்று விட்டன.
தமிழ் தேசியம்
அவ்வாறே தமிழ் அரசியல் பரப்பிலும் பல்வேறு கட்சிகள் தமக்கு இடையே குடும்பிச்சண்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கட்சிகளின் பிரிவுகளும், உடைவுகளும் எதிரிகளுடன் கூட்டுச்சேரும் ஒரு கூட்டத்தையும் தோற்றுவித்து விட்டது. யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வி, அதனாலஏற்பட்ட மன விரக்தி, போட்டி, பொறாமை என்பதன் தமிழ் சமூகத்தை சூழ்ந்து நம்பிக்கையீனங்களை தோற்றுவித்துவிட்டது. இந்த நிலையில் என்ன எம்மிடம் எஞ்சி இருக்கிறதோ அதை வைத்துக் கொண்டுதான் எதனையும் படைத்திட முடியும். இப்போது புதிய ஒரு அரசியல் சக்தியை தோற்றுவிப்பது அல்லது வளர்த்தெடுப்பதோ நடைமுறைக்கு சாத்தியமற்றது.
ஆகவே இப்போது இருக்கின்ற சூழல் என்பது தமிழ் தேசிய இனம் தன்னை எல்லாவகையிலும் ஐக்கியப்படுத்தி தன்னை தேசிய இனமாக தொடர்ந்து தக்கவைக்க வேண்டியுள்ளது. ஆகவே தரப்பட்டிருக்கின்ற களயதார்த்தம் என்னவெனில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற நான்கு அணிகள் களத்தில் உள்ளன. இந்த நான்கு அணிகளை கூடியபட்ச ஐக்கியத்திற்கு கொண்டு செல்வதே நடைமுறைக்கு சாத்தியமானது. கூட்டுச் சேர்வது என்பது ஒரு யுத்தம். அது போரின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி. அதுவே பொது எதிரியான சிங்கள தேசத்துக்கு எதிரான தடுப்புச்சுவர்.
தமிழர் தரப்பில் உள்ள தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் ஒரு ஐக்கியத்துக்கு வரவேண்டும். ஆகக்குறைந்தது போட்டி தவிர்ப்பு ஐக்கியத்திற்காவது வரவேண்டும். இந்த தேர்தல் களத்தை சிங்கள தேசத்துக்கு எதிரான ஒரு போராக பிரகடனம் செய்து போட்டி தவிர்ப்பு உடன்பாட்டுக்கு தமிழ் தேசிய கட்சிகள் வருவார்களேயானால் இங்கே பெரும் மனித பேராற்றலை தமிழ்த்தேசியத்தின் பெயரால் உருவாக்கிட முடியும்.
அந்தப் பேராற்றலின் வெளிப்பாடு தமிழ் தேசிய கட்டுமானங்களையும், தமிழ் தேசக் கட்டுமானங்களையும் கட்டுவதற்கான உடலியல், உளவியல் ஆற்றலையும் தமிழ் மக்களுக்கு கொடுக்கும். திரளான தமிழ்மக்களின் திரண்ட சக்தியாக தமிழர் தாயகத்தை தக்க வைக்க கூடிய திறனை கொடுக்கும். மாறாக அரசியல் பரப்பில் கட்சிகள் தமக்கிடையே தொடர்ந்து பிரிவடைந்து மக்கள் மத்தியிலும் எதிரிகள் மத்தியிலும் தோல்வியடைந்தால் தமிழர் தாயகத்தை விட்டு பெரும் இளைஞர் படை வெளியேறி செல்லும்.
இந்தத் தொடர் செயற்பாடு கடந்த 15 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்திருப்பதை காணமுடிகிறது. இந்த பெரும் அதிகரிப்பு என்பது எதிர்காலத்தில் தமிழர் நிலத்தில் வயோதிபர்களே எஞ்சும் நிலையை தோற்றுவிக்கும். இந்நிலையில் தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்வது சிங்கள தேசத்திற்கு இலகுவாகிவிடும். அதற்கான பாதையை நாமே வெட்டிக் கொடுப்பதாக அமைந்து விடும்.
அரசியல் என்பது நேற்றைய செயலும் அதன் விளைவான இன்றைய செயலும் இன்றைய செயலினால் ஏற்படப் போகும் நாளைய வளர்ச்சியும். அதனையும் தாண்டி இன்னும் பல தலைமுறைகளுக்கான இருப்பியலை பாதுகாக்கின்ற செயலாகவும் அமைய வேண்டும். இப்போது இருக்கின்ற தமிழர்தாயக அரசியல் சூழமைவை நுண்மான் நுழைபுலத்தோடு அணுகி தத்துவ விசாரணைகள் கூடாக நமது அரசியல் செயற்பாடுகளின் உட்பொருளை அறியவும், அச்செயல் தரவல்ல விளைவுகளாலும், அதன் தொடர் வளர்ச்சி போக்குகளுக்குரிய இயல்பிலும் உள்ள சாதக பாதகத் தன்மைகளை ஆராய்ந்து அடையாளம் கண்டு அரசியல் பாதையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இந்த நிர்ணயம் என்பது இருப்பவற்றில் எது மேலானதோ இருப்பவற்றில் எது எமக்கு மிகவும் சாதகமானதோ அதனை தெரிவு செய்ய வேண்டும். ஈழத்தமிழர்களின் சர்வதேச இருப்பு நிலை என்னவென்று பார்த்தால் இயற்கையாகவே தரப்பட்டுள்ள புவிசார் அமைவிட ஜதார்த்தம். ஈழத் தமிழர்கள் இந்து சமுத்திரத்தின் மையப் பகுதியில் இந்தியத் துணைக் கண்டத்தை பாக்குநீரிணை என்ற ஒரு சிறுகடலால் பிரிக்கப்பட்டு இரண்டு கரையிலும் தமிழ் பேசும் மக்கள் வாழும் ஒரு கேந்திர ஸ்தானத்தில் வாழ்வதுதான் அவர்களுக்கான புவிசார் அரசியல் நிர்ணய இருப்பாகும்.
அத்தோடு முள்ளிவாய்க்கால் பேரழிவு இனப்படுகொலை என்ற ஒரு வரத்தையும் இருப்பாக தந்துள்ளது. இந்த இரண்டு இருப்பையும் பயன்படுத்தக்கூடிய அரசறிவியல், ராஜதந்திர செயலாற்றல்களை நேர்த்தியாக கையாண்டு இன்றைய உலக அரசியலில் கானப்படுகின்ற ஒற்றைப் பொருளாதார மையத்தில் தோற்றம் பெற்றிருக்கின்ற இரட்டை அதிகார மையங்களுடன் ஒன்றுடன் இணைதலும் ஒன்றுடன் பிரிதலும் என்ற வகையில் சேரக்கூடிய ஒரு அதிகார மையத்துடன் இணைந்து நிலை எடுப்பதன் மூலம் இலங்கைத்தீவின் வட-கிழக்குத் தமிழர் தாயகத்தை தற்காத்துக் கொள்ள முடியும்.
இணைதலோ, பிரிதலோ இன்றி அணிசேராமல் எதனையும் சாதித்திடவோ, பெற்றிடவோ முடியாது. இப்போது இருக்கின்ற தரப்பட்டிருக்கின்ற யதார்த்தம் என்னவோ அந்தக் களயதார்த்தத்தில் இருந்து வரலாறு நமக்கு எதை விட்டு வைத்திருக்கிறதோ அதிலிருந்துதான் எம்மால் எதனையும் படைக்க முடியும். மாவை வைத்துக் கொண்டு சோறு சமைத்து விட முடியாது.
மா மட்டும்தான் நம்மிடம் இருக்குமேயானால் எம்மால் ரொட்டியோ, தோசையோ, பிட்டோ, இடியப்பமோதான் சமைக்க முடியுமேதவிர சோறை சமைத்துவிட முடியாது. இத்தகைய களயதார்த்தத்தை புரிந்து தமிழ் மக்கள் தமக்கான அரசியலை கற்பனாவாதங்களை கடந்து புவிசார் அரசியல் கண்ணேட்டத்தில் முற்றிலும் அறிவார்ந்து அரசியல் தத்துவார்த்த ரீதியில் அணுக வேண்டும் என வரலாறு தமிழ் மக்களுக்கு கட்டளையிடுகிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 29 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
