நேட்டோ நாடுகளை சீண்ட வேண்டாம் - புடினுக்கு பகிரங்க மிரட்டல்
உக்ரைனை அடுத்து நேட்டோ நாடுகளை சீண்டினால், உண்மையில் ஒட்டுமொத்த கூட்டணியும் எதிர்வினையாற்றும் என நேட்டோ தலைவர் ரஷ்ய ஜனாதிபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலளித்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை வெற்றிக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றார்.
ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்க நேட்டோ மற்றும் அதன் உறுப்பு நாடுகள் நீண்ட காலத்திற்கு உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடுகள் வேடிக்கை பார்க்காது
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பானது இன்னொரு நாட்டிற்கு விரிவடைவதை நேட்டோ உறுப்பு நாடுகள் தடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ஜார்ஜியா, மால்டோவா அல்லது உக்ரைனை சீண்டியது போல் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் விளாடிமிர் புடின் ஏதாவது தொல்லை தர நினைத்தால், நேட்டோ உறுப்பு நாடுகள் வேடிக்கை பார்க்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இது வெறும் உக்ரைன் மீதான தாக்குதல் மட்டுமல்ல, 40 மில்லியன் மக்கள் குடியிருக்கும் சுதந்திர ஜனநாயக நாடு மீதான தாக்குதல் எனவும் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சாடியுள்ளார்.