வன இலாகா காணிகளை விடுதலை செய்யாவிட்டாலும் விவசாயம் செய்யலாம் : காதர் மஸ்தான் தெரிவிப்பு(Video)
வன இலாகா காணிகளை விடுதலை செய்யாவிட்டாலும் ஏற்கனவே விவசாயம் செய்த இடங்களில் விவசாயம் மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்று (28.08.2023) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தனர்.
குறித்த களவிஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுவிப்பதற்குரிய நடவடிக்கை
மக்களின் கோரிக்கைக்கமைய கடந்த யுத்த காலத்தில் அதற்கு முதல் தண்ணிமுறிப்பிலுள்ள இடங்கள் அனைத்தும் 1984ஆம் ஆண்டு யுத்தத்திலே தான் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

வயல் செய்த இடங்களின் அடையாளங்கள் இருக்கின்றது. வரம்புகள் இருக்கின்றது. அவ்வாறான இடங்களை தான் மக்கள் கேட்கின்றார்கள்.
ஜனாதிபதி வவுனியாவிற்கு வந்திருந்த நேரம் தொடர்ச்சியாக குறித்த காணிகளை விடுவிப்பு செய்ய வேண்டும் என கோரி நிற்கும் போது வன இலாகாவிற்குரிய இடமாக இல்லாத இடங்களை அடையாளப்படுத்தி விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
தண்ணிமுறிப்பு பகுதியில் பிரச்சினைகள் உள்ளதால் நேரடியாக கள விஜயம் செய்திருக்கின்றோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் கதைப்பது அல்லது அமைச்சுக்கு மனு அனுப்பி காணிகளை விடுவித்து கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன.
கடந்த காலங்களில் தொல்பொருள் திணைக்களத்திற்கு கிட்டத்தட்ட 78 ஏக்கர்
கொடுக்கப்பட்டதோடு இன்னும் கொஞ்சம் கூடுதலான இடங்கள் பிடிக்கப்பட்டுள்ளது.
வன இலாகா தெரிவிப்பு
அந்த இடங்களையும், மக்கள் இருந்தாலோ, விவசாயம் செய்தாலோ, தோட்டம் செய்தாலோ அவ்வாறான அடையாளங்கள் இருந்தால் அதனையும் காட்டி விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
தற்போது கள விஜயம் மேற்கொண்டதை வைத்து மக்களுக்கு பிரயோசனம் அடையக்கூடிய வகையில் பழைய தொல்பொருள் அடையாளங்கள் இருக்கின்றதனை தவிர ஏனையவற்றை வழங்குவதற்காகவே இவ் விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.

வன இலாகா காணிகளை விடுதலை செய்யாதுவிட்டாலும் ஏற்கனவே விவசாயம் செய்த இடங்களெல்லாம் விவசாயம் மேற்கொள்ளலாம்.
அதாவது இரண்டு அல்லது மூன்று வருடங்கள்
விவசாயம் மேற்கொண்டு நிறுத்திய இடங்களையே கூறிகின்றேன். நீண்ட காலமாக
நிறுத்திய இடங்களை விடுவித்ததன் பின்னர் தான் விவசாயம் செய்யலாம்.
குறித்த சில காணிகளுக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவை முடிவடைந்ததும் அதனை விடுவித்து தருவதாக வன இலாகா கூறியிருக்கிறது.
குடியிருப்பு காணிகள் நீண்ட கால பிரச்சினையாக இருப்பதனால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முயற்சி தான் மக்களுக்குரிய காணிகளை விடுவித்து கொடுப்பதற்கு உரிய ஆக்க பூர்வமான நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |