ராஜபக்ச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்!
"ஆசிரியர் சமூகத்துக்கு ராஜபக்ச அரசு அநீதி இழைத்துள்ளது.இந்த அநீதிக்கு எதிராகவே நாம் வெகுண்டெழுந்துள்ளோம்.
அதிபர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாடு முழுவதிலும் மாபெரும் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம்.
அதேவேளை, நிகழ்நிலை கற்பித்தல் செயற்பாட்டைப் புறக்கணிக்கும் ஆசிரியர் சமூகத்தின் போராட்டமும் தொடரும்." - இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
"நிகழ்நிலை கற்பித்தல் செயற்பாட்டிலிருந்து விலகி இன்றுடன் 10 நாட்களாகின்றன. அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தை இடைநிறுத்தாது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அதேவேளை, எமக்கு நீதி கோரி நாடு முழுவதிலும் வீதியில் இறங்கிப் போராடுவோம். கொரோனாத் தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்குக் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அரசு எவ்வித வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில் ஆசிரியர் சமூகத்தினர் தாமாக முன்வந்து நிகழ்நிலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். ஆசிரியர் சமூகத்தினர் தங்களது சொந்தச் செலவிலேயே இந்தக் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
நிகழ்நிலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளை ஆசிரியர் சமூகத்தினருக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அதேபோன்று நிகழ்நிலை கற்றலில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பும் அரசுக்கு உரியது.
எனினும், இவை எதனையும் அரசு செய்யவில்லை. எமது தொழிற்சங்க நடவடிக்கையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இது பெரும் அநீதி எனவும் ராஜாபக்ச அரசு கூறி வருகின்றது.
எனினும், ராஜபக்ச அரசே எமக்கு அநீதி இழைத்துள்ளது. மாணவர்களுக்கு முறையான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஒரு வருடமும் நான்கு மாதங்களும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நிகழ்நிலை கற்பித்தல் செயற்பாடுகளை ஆசிரியர்கள் தாமாவே முன்னெடுத்தனர். எனவே, இவ்விடயத்தில் அரசே தவறிழைப்பதாக நாம் பெற்றோரிடம் கூறுகின்றோம்.
நாம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வுள்ளோம்.
அரசு நினைத்தால் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம். நூற்றில் 40 சதவீதமான மாணவர்களுக்கே நிகழ்நிலை கற்றலில் ஈடுபவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
நூற்றில் 60 சதவீதமான மாணவர்களுக்கு எவ்விதமான கற்றல் வாய்ப்புகளும் இல்லை. எனவே, அந்த 60 சதவீத மாணவர்களும் கற்றலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்காமைக்கான பொறுப்பை கல்வி அமைச்சே ஏற்க வேண்டும்" - என்றார்.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
