தேசிய பாதுகாப்பு இன்று பாரிய அச்சுறுத்தலில்..! மகிந்த - மைத்திரி முன்னிலையில் சஜித்
கடந்த காலங்களில் வெற்றி கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று சிதைவடைந்து வருகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் தற்போதைய மத்திய கிழக்கு போர் வரை கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட ஐந்து முக்கிய சம்பவங்களால் நாட்டின் பாதுகாப்பு அனைத்து மட்டங்களிலும் கேள்விக்குறியாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர ஜயசேகராம விகாரையில் இன்று(30) நடைபெற்ற ரஜவத்தே வப்ப தேரருக்கு மியன்மாரின் அக்கமஹா சத்தம்ம ஜோதிக தஜ கௌரவ நாமம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.
மகா சங்கத்தினரின் தலைமைத்துவம்
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "தேசிய பாதுகாப்பு என்பது இராணுவ ரீதியிலான பாதுகாப்பு மட்டுமல்ல; பொருளாதார, சமூக, அரசியல், சுகாதார, கல்வி மற்றும் வாழ்வாதாரம் என அனைத்துத் துறைகளும் இன்று பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளன.
முப்பது ஆண்டுகால யுத்தத்தின் போது மகா சங்கத்தினர் எத்தகைய தலைமைத்துவத்தை வழங்கினார்களோ, அதேபோன்றதொரு வழிகாட்டல் தற்போதைய இக்கட்டான சூழலிலும் நாட்டுக்கு அவசியமாகியுள்ளது.

மத்திய கிழக்கில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் முன்னெடுத்து வரும் தாக்குதல்களால் 'பாப் அல் மந்தப்' நீரிணை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இலங்கைக்குப் பாரிய பேரிடராக மாறும். அத்தியாவசிய உணவுப் பொருள்கள் முதல் எரிபொருள் விநியோகம் வரை சகல துறைகளும் இதன் மூலம் முடக்கப்படலாம்.
இந்த நெருக்கடியான நேரத்தில் அரசியலைத் தள்ளிவைத்துவிட்டு, மதத் தலங்களை மையமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். யுத்த காலத்தில் கிராமிய மற்றும் நகர மக்களுக்கு இடையில் இருந்த பிளவுகளை நீக்கி மகா சங்கத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

இன்று அதைவிடப் பெரிய சவால்கள் எழுந்துள்ளன. எனவே, மகா சங்கத்தினர் தலைமையில் அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, இந்தப் பேராபத்துகளில் இருந்து நாட்டை மீட்க நாம் அனைவரும் அணிதிரள வேண்டும்.
எம்மிடம் உள்ள அறிவுத்திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் இந்த சவால்களை நாம் வெற்றிகொள்வோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டனர்.





