இந்தியா சென்று நாடு திரும்பிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழு
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் 05 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த நிலையில் இன்று மாலை நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பியதும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான விரிவான தகவல்கள் எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதன் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கடந்த 5ஆம் திகதியன்று இந்தியா புறப்பட்டுச் சென்றதாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகள்
இந்த விஜயத்தின் போது, திஸாநாயக்க, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அகமதாபாத்தில் விவசாய பகுதிகள் மற்றும் விவசாயத் தொழில்கள் பற்றிய கண்காணிப்புச் சுற்று பயணத்திலும் தூதுக்குழு இணைந்திருந்தது.
விஜித ஹேரத், நிஹால் அபேசிங்க மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர், அனுரகுமாரவின் குழுவில் அடங்கியிருந்தனர்.