நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்பாடு
யாழ்ப்பாணம்
விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்றைய தினம்(30) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் போதைப்பொருளை எதிரான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
விழிப்புணர்வு
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளின் தாக்கம் எவ்வாறு சமூக மத்தியில் ஏற்படுத்தப்பட்டுகிறது என்பது தொடர்பில் விழிப்புணர்வு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் மாணவர்கள் மத்தியில் பாடசாலை அதிபர் , பொலிஸ் உயர் அதிகாரிகள் கருத்துரைகள் வழங்கியதுடன் , விழிப்புணர்வு தெரு நாடக ஆற்றுகையும் நடைபெற்றது.
மட்டக்களப்பு
முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை(30) இடம்பெற்றது.
போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் “முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
சத்தியப்பிரமான நிகழ்வு
இதன்போது ஜனாதிபதி விசேட உரை நிகழ்நிலை ஊடாக காண்பிக்கப்பட்டதுடன் போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களினால் சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், முப்படை அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை
போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ' முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு' தொடர்பில் கல்முனை பிரதேச செயலகத்தில் உறுதி எடுத்தல் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன் போது போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு தொடர்பில் பிரதேச செயலாளரினால் உரையின் போது தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட் , பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ். அமீர் அலி , பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனூபா நெளபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி அன்வர் , அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா , போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியொகத்தர் றாசீக் நபாயிஸ், மற்றும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை
போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் "முழு நாடுமே ஒன்றாக " தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (30 )காலை 10 மணிக்கு கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நிகழ்நிலை மூலமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப்பிரமாண உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.
புங்குடுதீவு
முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு எதிராக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை நாமும் சரிவரப் பயன்படுத்தி எமது பிரதேசத்திலும் உயிர்கொல்லி போதைப்பொருளை அடியோடு ஒழிக்கவேண்டும். இளைய சமூகத்தை அதிலிருந்து பாதுகாப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மக்களை நோக்கிய நிர்வாகம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கனால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்திப்பு, 'அபிவிருத்தி நோக்கிய பயணம் - புங்குடுதீவு 2025' என்னும் தொனிப்பொருளில் புங்குடுதீவு வடஇலங்கை சர்வதோய மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்றது.
பல்வேறு பிரச்சினைகள்
இந்தச் சந்திப்பில் புங்குடுதீவு மக்களால் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.
வீதித் திருத்தங்கள், கடற்போக்குவரத்து, இறங்குதுறை புனரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களங்களுக்குச் சொந்தமான வீதிகளின் புனரமைப்புத் தொடர்பில் தொடர்புடைய அதிகாரிகள் பதிலளித்தனர்.

உள்ளூர் வீதிகள் குறிப்பாக பிரதேச சபைக்குச் சொந்தமான 139 வீதிகளில் முன்னுரிமை அடிப்படையில் 10 வீதிகள் திருத்தத்துக்கான முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு இவற்றை புனரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
குடிநீர் விநியோகக் குழாய்கள் பொருத்தப்பட்டும் குடிநீர் வழங்கப்படாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

மருத்துவமனையின் தேவைகள், வங்கிச் சேவைகளின் மேலதிக தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
குறிப்பாக கல்வி தொடர்பில் மிக நீண்ட நேரம் ஆராயப்பட்டது. பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
குறிப்பாக எதிர்காலத்தில் பாடசாலைகளை கொத்தணிகளாக்கி ஆளணிகளைப் பங்கிடுவதன் சாதக பாதகங்கள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.










