சாணக்கியனை பகிரங்க விவாதம் ஒன்றிற்கு அழைக்கும் நசீர் அஹமட்
நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன்(Shanakiyan) கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது "ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை இல்லை.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணிப்பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகிறார்கள்" என்று தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே உங்களுடன் பகிரங்க விவாதத்தை நடாத்த நான் தயாராக இருக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்(Naseer Ahamed) தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளுக்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அநீதிகள் குறித்தும் சட்டத்திற்கு முரணாக முஸ்லிம் பிரதேச செயலகங்களின் காணி எல்லைகள் கபளீகரமாக பறிக்கப்பட்டது தொடர்பிலும், அரச அதிகாரிகள் சிலர் முஸ்லிம் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்கொண்ட ஓரவஞ்சனையான செயற்பாடுகள், முஸ்லிம்கள் இழந்த காணிகள், இழந்த கிராமங்கள் மற்றும் முஸ்லிம் பிரதேச காணிகள் கபளீகரம் செய்யப்பட்டமை தொடர்பிலுமே உங்களுடன் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த இந்த அழைப்பு விடுக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாவட்ட முஸ்லிம்களுக்குக் காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை இந்நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்விடயங்கள் குறித்து உங்களுடைய அறியாமையை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும்
இது தொடர்பாகத் திறந்த வெளியில் உங்களுடன் விவாதிக்கும் வகையில் உங்களது
சம்மதத்தை நான் எதிர்பார்ப்பதுடன் அதற்குரிய இடம், பொருத்தமான நேரம்
தொடர்பில் இருவரும் கலந்தாலோசித்து இந்த பகிரங்க விவாதத்தை நடத்த வேண்டும்
என தெரிவித்துள்ளார்.