பொடி லேசியின் நெருங்கிய உறவினர் பொலிஸ் காவலில் உயிரிழப்பு
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் ஊழியரான குறித்த சந்தேக நபர் பொடி லேசியின் நெருங்கிய உறவினர் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் கடத்தல்காரர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று (10) பிற்பகல் நாரஹேன்பிட்டியில் வைத்து இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் ஊழியரை கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து சுமார் 15 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதுடன், மருதானை பிரதேசத்தில் உள்ள ஒருவரிடமிருந்தே போதைப்பொருளை பெற்றுக்கொண்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை மருதானை பகுதிக்கு நெலும் கோபுரத்திற்கு அருகில் அழைத்து வரும் போது, அவர் தண்ணீர் குடிக்க வேண்டும் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட கண்ணாடி போத்தலை உடைத்து போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார்.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது மயக்கமடைந்த நிலையில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போதே சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

