நந்திக்கடலில் தோன்றப் போகும் மற்றொரு மக்கள் பிரச்சினை: தீர்வுகள் காணப்படுமா...
முல்லைத்தீவில் உள்ள மிகப்பெரிய கடல் நீரேரியாக விளங்குகின்றது நந்திக்கடல். ஈழத்தமிழரின் விடுதலைப் போரின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட இடமாகவும் இது இருப்பது கவனிக்கத்தக்கது.
நந்திக்கடலும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் எல்லையிடப்பட்டு வருகின்றது. பாதுகாக்கப்பட்ட இயற்கை வளமாகிறது.
இலங்கையின் வடக்கிலுள்ள காடுகளை வனஜிவராசிகள் திணைக்களம் தன் ஆளுகைக்குள் எல்லைப்படுத்தி கொண்டு வருவதானால் அதிகளவான புதிய பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றமை கடந்த காலங்களில் இருந்து தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
அதிகமாக விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்ததோடு சில இடங்களில் குடியிருப்பு நிலங்களும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்குரிய பகுதிகள் என குறிப்பிட்டு பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இப்போது நந்திக்கடலும் வனஜிவராசிகள் திணைக்களத்தின் வசமாகிப் போகின்றது. மீன்பிடித்தல், கால்நடைகளின் மேச்சல் போன்ற மக்களின் வாழ்வாதார மூலங்கள் இனிவரும் காலங்களில் பாதிப்படையலாம் என சமூக விடய ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்படுகின்றது.
நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம்
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் "நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம்" என குறிப்பிட்டு நந்திக்கடல் பகுதியில் பல இடங்களில் அறிவுறுத்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது.(A34 பாதை வழியே முல்லைத்தீவில் இருந்து மாங்குளம் நோக்கிய வழியிலும் ஒரு அறிவிப்புப் பலகையை காணலாம்.)
காட்டு மிருகங்களை வேட்டையாடுதல், வெடிவைத்தல், கொல்லுதல், பிடித்தல் அல்லது காட்டு மிருகங்களை பிடித்து வளர்ப்பதற்கு அல்லது கொல்லுவதற்கு பொறிவைத்தல், ஏதேனும் பறவைகளின் அல்லது ஊர்வனவற்றின் முட்டைகளை சேகரித்தல் அல்லது கூடுகளை சேதப்படுத்தல், விலங்குகள் பெருகுகின்ற இடங்களுக்கு சேதம் விளைவித்தல், ஏதேனும் தாவரங்களை வெட்டுதல், சேகரித்தல், அழித்தல் பிடுங்குதல், கட்டடங்களை அமைத்தல், காணிகளை துப்பரவாக்குதல், பயிர் செய்தல், சுரங்கம் தோண்டுதல் கழிவுகளைக் கொட்டுதல், சதுப்பு நிலங்களை நிரப்புதல் போன்றன முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன என தகவல் பலகையில் குறிப்பிட்டுள்ளதோடு தகவல் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் நாயத்தினது என உணர்த்தப்பட்டுள்ளமையையும் நோக்க வேண்டும்.
நந்திக்கடலில் வாழும் மீன்களும் விலங்குகள் என்பதால் இந்த அறிவித்தல் மீன்பிடித்தலை பாதிக்குமா என்ற கேள்வி எழுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். எருமை மாடுகளும் நந்திக்கடல் நீரேரியின் நன்னீர் சம்புப்பகுதிகளிலும் புற்தரைகளிலும்(கோடை காலத்தில்) மேச்சலுக்காக செல்கின்றன என்பதோடு அவை மக்களுக்கு உரித்தான மக்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் ஆகும்.
இவை நந்திக்கடலினை மேச்சல் தளமாக கொள்வதால் அதன் இயற்கையாக வளர்ந்துள்ள புற்களை அழிக்கின்றன என சுட்டப்பட்டால் கால்நடைவளர்ப்போர் தம் கால்நடைகளுக்கான மேச்சல் தளத்தை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நந்திக்கடலும் மக்களும்
நந்திக்கடல் நீண்ட கரையைக் கொண்டதும் சற்று ஆழமான நீர் நிலையைக் கொண்ட ஒரு பகுதியையும் கொண்டுள்ள மீன் வளமிக்க ஒரு பிரதேசமாகும். கண்டல் காடுகளையும் நீர்புற்களையும் கொண்டிருப்பதோடு அதிகளவான உயிர்ப்பல்வகைமையை பேணுவதில் பெரும் பங்காற்றும் இயற்கைச் சூழல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வட்டுவாகல் பாலமும் அதனையண்டிய சூழலும், கேப்பாப்புலவு, பச்சைப்புல்மோட்டை, இரட்டைவாய்கால், மஞ்சள் பாலவெளி, வற்றாப்பளை, மந்துவில் என நீண்டு செல்லும் மீன்பிடித்தளங்களை இது கொண்டுள்ளது.
A34 பாதையின் வழியே முல்லைத்தீவில் இருந்து மாங்குளம் நோக்கிய வழியில் மஞ்சள் பால வெளி வரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பாதுகாப்பு எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு வருகின்றமையை இப்போது அவதானிக்க முடிகின்றது.
எதிர்காலத்தில் நந்திக்கடலில் மீன் பிடிப்பதற்கு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தடை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தினை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இயற்கை ஒதுக்கிடமாக ஒதுக்கப்பட்டுள்ள நந்திக்கடல் பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பான செயற்பாடுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல் எவையும் எடுத்துரைக்கப்படவில்லை.
அவ்வாறான வழிகாட்டல்கள் எவையேனும் முன்னெடுக்கப்படும் போது அவை பொதுமக்களின் பார்வைக்கு நந்திக்கடல் பகுதியில் குறிப்பாக மீன்பிடித்தளங்களை கொண்டுள்ள இடங்களில், மேச்சல் தரைகளாக பயன்படும் இடங்களில் வைக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் சுட்டிக் காட்டுகின்றனர்.
மீனவர்களிடமும் கால்நடை வளர்ப்போரிடமும் நந்திக்கடல் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்படுதல் தொடர்பான தெளிவுகள் இல்லாமையை அவர்களோடு பேசும் போது அறிய முடிந்தது.
நந்திக்கடலின் இயற்கை வளத்தை பாதுக்க முற்படும் போது நந்திக்கடலினை தங்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வரும் மக்களோடு இணைந்து அவர்களும் பாதிக்கப்படாத வகையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் ஆரோக்கியமான முயற்சியாக அமையும் என சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் சிலர் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீனும் விலங்கு கூட்டத்தைச் சேர்ந்ததே!
புவிவாழ் உயிர்களை ஆய்வு செய்யும் போது அவற்றின் வேறுபட்ட தன்மையை உயிர்ப்பல்வகைமை என உயிரியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். முதல் உயிரினமாக தனிக்கல அங்கிகள் நீர் நிலைகளில் தோன்றின. அவற்றைத் தொடர்ந்து அவற்றில் நடந்த கூர்ப்பினால் பல்கல அங்கிகள் தோன்றின.
நீர் வாழ் அங்கிகளில் முதலில் தோன்றிய முள்ளந்தண்டுளி மீன் ஆகும். விலங்குகளை முள்ளந்தண்டைக் கொண்டு இரண்டாகப் பிரிக்கலாம். முள்ளந்தண்டுளிகள், முள்ளந்தண்டிலிகள் என்பனவாகும். முள்ளந்தண்டை கொண்ட விலங்கு முள்ளந்தண்டுளி எனப்படும்.
மீனின் முள்ளந்தண்டை நாம் மீன்முள் என குறிப்பிடுகின்றோம். மீனும் விலங்கு என்பது பொதுவான வழக்கில் மறக்கப்படுவது அறிவியல் பூர்வமாக மக்கள் இன்னமும் வாழத் தலைப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது என உயிரியல்த்துறை ஆசிரியர் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.