அநுராதபுர கூட்டத்தில் நாமல், மக்களிடம் கூறவிருந்த விடயங்களை கூறுவார் : விடுக்கப்படும் சவால்
எதிர்வரும் 12 ஆம் திகதி மக்களிடம் கூற வேண்டிய விடயங்களை நாம் ராஜபக்ச நிச்சயம் கூறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பேரணியில் நாமல் ராஜபக்ச ஆற்றவிருந்த விசேட உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்துவார் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஊடகங்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத்தில் தமது அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவற்றை தாம் அங்கீகரிக்கப் போவதில்லை எனவும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒரு ஜனநாயக நாட்டிற்குப் பொருத்தமானவை அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷவின் மனைவி உரையாற்றுவார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள், வெறும் ஆதாரமற்ற வதந்திகளே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தருவார் எனவும் அநுராதபுரத்தில் மக்கள் முன் வைக்கவிருந்த அந்த சக்திவாய்ந்த உரையை அன்று பாராளுமன்றத்தில் நாட்டு மக்கள் முன் வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
அதைப் பார்த்துக்கொண்டிருக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.