நாமல் ராஜபக்சவின் வழக்கு ஆவணங்களைப் பரிசோதிக்க பொலிஸாருக்கு அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிரான வழக்கொன்றின் ஆவணங்களைப் பரிசோதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை, கிரிஸ் ட்ரான்ஸ்வர்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வழங்குவதில் 70 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
தற்போதைய வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இதற்கான முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார். நாமல் ராஜபக்சவுக்கு இந்தவழக்கில் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கின் விசாரணைகள் நேற்றைய (16) தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் ஆவணங்கள் நகல் பிரதிகளா? அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளா என்பதை பரிசோதிக்க அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
குறித்த வேண்டுகோளுக்கு அனுமதியளித்த கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் லங்கா நிலுபுலி, நீதிமன்ற பதிவாளரிடம் உள்ள ஆவணங்களைப் பார்வையிட குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |