நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்
புதிய இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எயார்பஸ் விமானங்களை கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இன்று (13) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கை, மூன்று நிரந்தர உறுப்பினர்களை கொண்ட மேல் நீதிமன்ற அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரி தலைமை நீதிபதியிடம் விண்ணப்பிக்க உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால், நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ச இன்று (13) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் மூன்று ஊழல் வழக்குகள்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்டுள்ள 'கிரிஷ்' வழக்கு மற்றும் எயார் பஸ் விவகாரத்தில் இலஞ்சம் பெற்ற வழக்கு ஆகியவை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச , மகன்களான நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று ஊழல் வழக்குகள் இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
