நாமல் ராஜபக்ச உள்ளிட்டோருக்கு பணச்சலவை வழக்கு: நீதிமன்ற உத்தரவு
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பணச்சலவை வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனையை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (11.05.2023) சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் ஒன்றை அனுப்பியுள்ளது.
நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனத்தின் ஊடாக 15 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக இந்த ஐந்து பேருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்க நினைவூட்டல்
சந்தேக நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே இந்த நினைவூட்டலை நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இது தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இந்த வழக்கில், நாமல் ராஜபக்ச, சுதர்சன பண்டார கனேவத்த, நித்ய சேனானி, சுஜானி போகொல்லாகம மற்றும் இந்திக பிரபாத் கருணாஜீவ ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முன்னதாக என்ஆர் மற்றும் கொன்சல்டேஷன் மற்றும் கவர்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஊடாக நாமல் ராஜபக்சவும் ஏனைய நான்கு பேரும் 15 மற்றும் 30 மில்லியன் ரூபாய்களை முறைக்கேடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் 30 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |