நாமல் ராஜபக்சவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை மனு தொடர்பான உத்தரவு நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழு மற்றும் சந்தேகநபரின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த வாதங்களை கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள டிரான்ஸ் வொர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை, கலப்பு பயன்பாட்டு அபிவிருத்தித் திட்டத்திற்காக க்ரிஷ் குழுமத்திற்கு மாற்றுவதற்கு உதவியதற்காக 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
எயார்பஸ் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நவம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக சிறையிலிருந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதிகள் குழாம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று காலை (28) கொழும்பு நிரந்தர மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.