மீண்டும் பலம்பெறும் மொட்டு! சானக்க - ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள் என்று நாமல் அறிவிப்பு
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் டி.வி. சானக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் குழு கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவர்
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் குழு கூடி, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியது.

குறிப்பாக, விரைவில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பரிசீலித்து, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பிரதான குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கட்சியின் அடிமட்டப் பலத்தை அதிகரிப்பதற்காகப் பல்வேறு துணை அமைப்புகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணம் குறித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான அனுமதி அரசியல் குழு உறுப்பினர் டி.வி. சானக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பதவிகளின் எண்ணிக்கை
இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த முக்கிய உடன்பாடுகளுக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் துணைத் தலைவர் பதவிகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிச்சயமாக இரண்டு துணைத் தலைவர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
புதிய அரசியல் கூட்டணிகள் உருவாவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு பலமான அரசியல் கட்சி என்பதால், எமது தனித்துவமான அரசியல் பயணத்தை நாம் தொடர்வோம்.
எதிர்காலத் தேர்தல் காலங்களில் கூட்டணிகளை அமைப்பது குறித்துப் பின்னர் கலந்துரையாட முடியும். தற்போதைய சூழலில் எதிர்க்கட்சியின் அரசியல் சக்திகள் குறித்து எமது கவனம் குறைவாகவே உள்ளது.
முக்கிய நோக்கம்
தற்போதைய அரசாங்கத்தால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராகப் பலமான அரசியல் சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதே பொதுஜன பெரமுனவின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், அரசாங்கத்திற்குள் நிலவும் எல்லையற்ற ஊழல்கள், குறிப்பாக நிலக்கரி ஊழல் மற்றும் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு எதிராகப் போராடுவதே எமது லட்சியமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி போன்ற ஏனைய கட்சிகளிலிருந்து மக்கள் எமது கட்சியுடன் இணைந்து வருவதை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
கிராம மட்டத்தில் பொதுஜன பெரமுன மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது. புதியவர்களையும் இணைத்துக் கொண்டு மிகப்பலமான முறையில் கட்சி முன்னோக்கிச் செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.