பிள்ளையானுக்காக கொந்தளித்த நாமல்
சமகால அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து நாமல் கோபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பிள்ளையான் கைது தொடர்பில் கருத்து வெளியிடும் போது நாமல் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் கைது
பிள்ளையானை கைது செய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாக அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.
எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்ற கேள்விக்கு முறையான பதில் அரசாங்கத்திடம் இல்லை என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. எனினும் பிள்ளையானின் தடுப்பு காவல் உத்தரவில் அவ்வாறானதொரு விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
பாதுகாப்பு அமைச்சு
ஆனாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்கும் அனுமதி, பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது தொடர்பில் நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பிள்ளையான் செயற்பட்டிருந்தார்.
ராஜபக்சர்களின் தேவைக்கு அமைய பல்வேறு குற்றச்செயல்களில் பிள்ளையான் குழு ஈடுபட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



