நாமலை சிறையில் அடைக்கும் முயற்சியில் ரணில் மற்றும் மைத்திரி
தனக்கு எதிரான வழக்குகளில் 100 சதவீதமானவை மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நாமல் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்களில் யாரையும் தான் வெறுக்கவில்லை. அரசியல் ரீதியாக அரசியல் வழக்குகளை எதிர்கொள்வேன் என அவர் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியான கருத்து
“இந்த நாட்டின் குடிமக்களாக, நாங்கள் யாருடனும் பழக்கம் வைத்துக் கொள்ள முடியும். அரசியல் ரீதியான எதிர் கருத்து கொண்டவர்களாக இருக்கலாம்.
எங்களை சிறையில் அடைக்க முயற்சிப்பவர்கள் இருக்கலாம். நாங்கள் அவர்களை வெறுக்க மாட்டோம். நாங்கள் அவ்வாறு செய்திருந்தால், ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது.
வழக்கு தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் செய்திருக்க முடியாது. எங்கள் இதயங்களில் எந்த கசப்பும் இல்லை. நாங்கள் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்கிறோம்.
அரசியல் ரீதியாக அரசியல் வழக்குகளை எதிர்கொள்கிறோம், ஆனால் நாங்கள் அதை வெறுப்புடன் எதிர்கொண்டு தப்பித்துக்கொள்வதில்லை.
ஆனால் சில அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மற்றவர்களுடன் பேசுவதில் சிக்கல் உள்ளது. எனினும் எங்களுக்கு அப்படியானதொரு நிலை இல்லையென நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.



