பல தசாப்தங்களாக அரச இல்லங்களில் இருப்பிடம்.. அடிமையாகிவிட்ட முன்னாள் ஜனாதிபதிகள்
முன்னாள் ஜனாதிபதிகள் சிலர் 30 - 31 வருடங்கள் அரச உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வாழ்ந்துள்ளனர். ஆதலால் இவர்கள் இதற்கு அடிமையாகி விட்டனர் என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்த அவரின் உரையாடலில், "ஒருவர் 94ஆம் ஆண்டு அமைச்சராக அரச உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசித்து பின்னர் பிரதமராக சிறுது காலம் மேலும் 10 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து பின்னர் முன்னாள் ஜனாதிபதியாக பின்னர் பிரதமராக தொடர்ந்து 31 வருடங்கள் வசித்துள்ளார்.
அத்தோடு மேலும் ஒருவர் 94 இருந்து அமைச்சராகவும் 2015 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக ஐந்து வருடங்கள் பின்னர் முன்னாள் ஜனாதிபதியாக இன்று வரையும் இருந்துள்ளார்.
தனிமனித கோபம்
மேலும், ஒருவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஜனாதிபதியாகவும் பின்னர் முன்னாள் ஜனாதிபதியாகவும் 30 - 31 வருடங்கள் அரச இல்லங்களில் வாழ்ந்துள்ளனர்.
அதாவது அவர்களின் பிள்ளைகள் பிறந்து, வளர்ந்து படித்தது முதலும் பிள்ளைகள் திருமணமாகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்ததும் அரச இல்லங்களில் தான்.
இவர்களுக்கு அனைத்தும் இருந்து கொழும்பில் வீடு இல்லை என்பது ஏற்கொள்ள முடியாததாகும். எங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையை நிறைவேற்றியுள்ளோம். எந்தவித தனி மனித கோபமும் எங்களுக்கில்லை” என்றார்.



