போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது இது முதல் தடவையா!
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது இது முதல் தடவையல்ல எனத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி நிகழ்வுகளை எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போர் முடிவடைந்ததன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரில் உயிர்நீத்த தமது சொந்தங்களை மக்கள் நினைவுகூர்ந்து வந்தனர் எனவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் இது இந்த ஆண்டு முதன்முதலில் நடப்பதைப் போன்று பிரசாரம் செய்வதாக அவர் விமர்சித்துள்ளார்.
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதில் எவ்விதத் தவறும் கிடையாது எனத் தெரிவித்த அவர், "எனினும் எல்லையை மீறி தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றுக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களது அடையாளங்கள், இலச்சினைகளைக் கொண்டோ நினைவேந்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த விவகாரத்தில் தலையீடு செய்வார்கள். இவ்வாறான தலையீடுகள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றன," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "மஹிந்த ராஜபக்ஷவை மேடையில் வைத்துக்கொண்டு, பிரபாகரனைத் தனது தெய்வமென நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறியபோது அது பற்றி யாரும் பேசவில்லை. எனினும், போரில் உயிர்நீத்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தும்போது இவர்கள் அதனை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்," எனவும் நஜித் இந்திக குற்றம் சுமத்தினார்.
அண்மையில் வடக்கில் சிங்களவர் ஒருவரின் கடை உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில முக்கியஸ்தர்கள் இனவாத அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சிங்களவர் ஒருவரின் கடை உடைக்கப்பட்டதாகவும், தெற்கில் தமிழர்களின் கடைகள் உடைக்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்திலும் சிலர் பிரசாரம் செய்ததாகக் கூறியுள்ளார்.
எனினும், கடையின் உரிமையாளரே அங்கு நடந்த உண்மைச் சம்பவத்தைச் சமூக ஊடகத்தில் விளக்கியதால், அந்தப் பிரச்சினையை எதிர்த்தரப்பினரால் தமது பிரசாரத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இனவாதத்தைக் கையிலெடுத்துப் போலிப் பிரசாரங்களைச் செய்து இழிவான அரசியல் செய்ய வேண்டாம் எனத் தாம் எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக மேலும் தெரிவித்துள்ளார்.