இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள நாகஸ்த்ரா-1ஆளில்லா விமானம்
இந்திய இராணுவத்தில் விரைவில் அந்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாகஸ்த்ரா-1 என்ற தற்கொலைப் படை ஆளில்லா விமானம் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் நாகஸ்த்ரா-1ஆளில்லா விமானத்தின் சிறப்புகள் குறித்து இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இறுதிக் கட்ட ஆய்வு
நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த தற்கொலைப் படை ட்ரோன்களை உருவாக்கி உள்ளது. முதற்கட்டமாக இந்த ரகத்தில் சுமார் 480 ட்ரோன்களை வாங்க இந்திய இராணுவம் கட்டளையை வழங்கியுள்ளது.
இது தொடர்பான இறுதிக் கட்ட ஆய்வு கடந்த மே 20-25 திகதிகளில் நிறைவடைந்த நிலையில், புல்கானில் உள்ள இராணுவ தளத்திற்கு இப்போது முதற்கட்டமாக 120 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நாகாஸ்ட்ரா-1 ட்ரோன்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லியமான தாக்குதல்கள் நடத்துகின்றன. ஒரு முறை பறக்கத் தொடங்கினால் சுமார் 30 நிமிடங்கள் வரை இதனால் தொடர்ந்து பறக்க முடியும்.
15 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளையும் இது வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கும் திறன் உள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும், நாகஸ்த்ரா-1 பாயும் போது மிகக் குறைந்த ஒலி மட்டுமே வெளியாகும்.அத்துடன் இது 200 மீட்டருக்கும் மேல் பறந்தால் இதை ரேடார் கருவியின் மூலமும் கண்டறிய முடியாது.
இது சுமார் 1 கிலோ ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. நாகஸ்த்ரா-1 ட்ரோன்களில் பாராசூட் வசதி இருக்கிறது.
இதன் மூலம் ஒரு முறை பயன்படுத்திய ட்ரோன்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |