முள்ளிவாய்க்கால் மேற்கில் மக்கள் குறைகேள் சந்திப்பு நாடாத்திய ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால்மேற்கு கிராம அலுவலர் பிரிவில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்று (18.09.2025) நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த மக்கள் குறைகேள்சந்திப்பில் உள்ளகவீதிகளின் சீரமைப்பு, மைதானச் சீரமைப்பு, கிராமத்தில் அதிகரித்துக்காணப்படும் சட்டவிரோத உற்பத்தியைக்கட்டுப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முள்ளிவாயாக்கால் மேற்கு கிராமமக்களாலும், கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிகளாலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்தோடு கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகளுக்குப் பிற்பாடு இதுவரை முள்ளிவாய்க்கால் மேற்கில் பெரிய அளவில் அபிவிருத்தி வேலைகள் எவையும் இடம்பெறவில்லை என கிராம மக்களாலும், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிகளாலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் மிகப்பாரிய அழிவுகளை எதிர்நோக்கிய தமது முள்ளிவாய்க்கால் கிராமம் அபிவிருத்திகள் எவையுமின்றி சகலவழிகளிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் மேற்கிலுள்ள சகல உள்ளக வீதிகளும் மக்கள் பயன்படுத்தமுடியாத அளவில் சீரமைப்பின்றி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றன.
அதேபோல் விளையாட்டுமைதானமும் சீரமைப்பின்றி மழைநீரில் மூழ்கி காணப்படுகின்றது. இவ்வாறாக முள்ளிவாய்க்கால் மேற்கு கிராமம் முறையான அடிப்படை வசதிகளின்றிக்காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பினைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மக்களோடு இணைந்து முள்ளிவாய்க்கால் மேற்கிலுள்ள குறைபாடுகள்தொடர்பில் நேரடியாக பார்வையிட்டிருந்தார்.
அத்தோடு இதன்போது முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைக் கடிதங்களும் கையளிக்கப்பட்டன. அந்தவகையில் மக்களிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கவனஞ்செலுத்துவதாகத் தெரித்துள்ளார்.
மேலும் இந்த மக்கள் குறைகேள் சந்திப்பில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஜோசெப் மாசிலாமணி கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.









