சுற்றுலா விடுதி ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மகும்பல்
சுற்றுலா விடுதி ஒன்றில் மது அருந்திவிட்டு ஊழியர்களை தாக்கி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்து தப்பிச் சென்ற குழுவொன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கந்தகுளிய - துடாவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சுற்றுலா விடுதிக்கு நேற்று பிற்பகல் 16 பேர் கொண்ட குழுவினர் பேருந்தில் வந்துள்ளனர். தங்குவதற்கு 05 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் கடன் அட்டை மூலம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகை தந்த குழுவில் 06 ஆண்கள், 06 பெண்கள் மற்றும் 04 சிறுவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது வந்த குழுவினர் மது அருந்த விரும்புவதாகவும், அதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.
ஊழியர்கள் தயார் செய்த இடத்தில் மது அருந்திய கும்பல், தங்களுக்கு வசதிகள் போதுமானதாக இல்லை எனக் கூறி மோதலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் இருவரை தாக்கி 85,300 ரூபா பணம், 15,000 ரூபா பெறுமதியான 06 டவல்கள், தொலைக்காட்சிப் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் வந்த பேருந்திலேயே சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் எந்த பகுதியில் வசிப்பவர்கள் என்று தெரியவில்லை என்று கூறிய ஹோட்டல் ஊழியர்கள், அவர்கள் வந்ததாக கூறும் பேருந்தின் பதிவு எண்ணை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.
அந்த பதிவு இலக்கத்தின்படி வந்தவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.