சுவிஸ் மக்களை அச்சுறுத்தும் மர்ம மோசடி கும்பல்: பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
சுவிஸ் வாழ் மக்களுக்கு நவீன மோசடி கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மோசடிக்கும்பல் குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி ‘‘ தான் ஒரு காவல்துறை அதிகாரி என்றும், நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டீர்கள், அல்லது உங்கள் உறவினர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டார்.
ஆகவே, நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்று தொலைபேசியில் கூறி பணம் பெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு ஏமாற்றப்பட்ட மக்களிடம் இருந்து குறித்த கும்பல் சுமார் 800,000 சுவிஸ் ஃப்ராங்குகளை பறித்துள்ளதாகவும், இது குறித்து புகார்கள் குவிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோசடி கும்பலினை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மக்கள் தங்கள் உறவினர்களான முதியவர்களிடம் இந்த விடயம் குறித்து எடுத்துக் கூறி அவர்களை எச்சரிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.