ஐக்கிய மக்கள் சக்தியை விமர்சிக்கும் எனது செயல் நியாயமானது : சரத் பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீதான தனது முன்னைய விமர்சனங்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியாயப்படுத்தியுள்ளார்.
கட்சித் தலைமையை விமர்சிப்பவர்கள் மற்றும் ஒழுக்கத்தை மீறுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாச கூறிய நிலையிலேயே சரத் பொன்சேகா தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் பலம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் உயர் தரப்பினர் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கும் போது
பொது வெளியில் ஒருவர் தனது குறைகளை தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை
எனினும், கட்சிக்குள் ஒருமைப்பாட்டுடன் முடிவுகள் எடுக்கப்படாத போதும் கட்சிக்குள் விவாதம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு கிடைக்காதபோதும் இந்தக் குறைகளை பொதுமக்களிடம் தெரிவிப்பதுதான் எஞ்சியிருக்கும் ஒரே வழி.
இருப்பினும், கட்சியின் பலம் அதன் உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என்பதை எப்போதும் சஜித் நினைவிற் கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே கட்சியின் பலம் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி என்பது பலர் கடுமையாக உழைத்து கட்டமைத்த கட்சி.
மக்களின் அபிலாசைகள்
குறித்த கட்சியானது உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலமே உருவாக்கப்பட்டது. இந்தநிலையில் கொள்கைகள் மற்றும் விழுமியங்களை கடைப்பிடித்தால் மட்டுமே கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும்.
தேர்தலில் வெற்றியடைய கூட்டணிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இந்தக் கூட்டணிகள் மக்களின் விருப்பத்தையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்க வேண்டும்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் கூட்டணி அமைத்தால், கட்சிக்கு கேடு விளையும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |