விடுதலைப்புலிகள் பெற்ற வெற்றி : வீதியோர மரநடுகைகளில் நினைவு கொள்ளும் மக்கள்
முல்லைத்தீவு நகரின் வீதியோரங்கள் யாவும் மரங்களை நாட்டி வளர்க்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நகரமொன்றின் வீதிகளை மரங்களை நட்டு வளர்த்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முல்லைத்தீவு நகரின் எல்லா வீதிகளிலும் மரக்கன்றுகளை நாட்டியிருந்தனர்.
மரங்களை நாட்டும் போது பொருளியல் நோக்கில் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து நிலவி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மரங்களை நடும் முயற்சி
வீதிகளில் நட்டு வளர்க்கும் மரக்கன்றுகளில் குறைந்தளவான மரக்கன்றுகளே உயிர் தப்பி வளர்ந்து வருகின்றன. ஏனைய மரக்கன்றுகள் பட்டுப் (இறந்து விட்டன) போய் விட்டன. இலங்கை இராணுவத்தினரின் ஒரு குழுவினர் புதிய மரக்கன்றுகளை நாட்டுவதற்கான இடங்களை தயார் செய்வதில் ஈடுபடுவதனை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. முல்லைத்தீவு நகரின் வியாபார செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வயதான ஐயா ஒருவரும் தன் அவதானிப்புக்களை பகிர்ந்துகொண்டார்.
புதிய மரக்கன்றுகளை முன்பு நட்டு பட்டுப் போன இடங்களில் நாட்டி வளர்க்கும் போது மரங்களின் வரிசையொன்றினை வீதிகளின் ஓரங்களில் காணலாம்.
எல்லா மரக்கன்றுகளும் வளரும் போது பெருவிருட்சத் தொகுதியொன்று தோன்றிவிடும் என நகரத்துக்கு வேலைக்காக வந்து செல்லும் அரசு அதிகாரியொருவரிடம் மரக்கன்றுகளை நாட்டுவது தொடர்பில் கருத்துக் கேட்ட போது குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்
நல்லாட்சி அரசாங்கம் என அழைக்கப்பட்ட மைத்திரிபாலசிறிசேன அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முல்லைத்தீவு நகரின் வீதியோரங்கள் யாவும் மரக்கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
மரக்கன்றுகளை நாட்டி அவற்றைச் சூழ சீமெந்து கற்களால் சுற்று மதில் அமைப்பினை கட்டியெழுப்பி அவற்றை பாதுகாத்து வளர்க்க முயன்றிருந்தனர்.
அப்போதைய மாவட்ட அரசாங்க அதிபரினால் இந்த மரக்கன்றுகளை நாட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு நகரின் வீதிகளில் இன்று வளர்ந்துள்ள இளம் மரங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நடப்பட்டு தப்பிப் பிழைத்தவை என நகரவாசிகள் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
பெருமரங்களை இழந்த முல்லைத்தீவு நகரம்
அபிவிருத்தி என்ற முன்னோக்கிய செயற்பாடுகள் இயற்கை அமைப்பினை மாற்றி விடுகின்றன.சூழல் நேயத் தன்மையோடு நகர அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் குறைவாக இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
இயற்கையான பெருமரங்களை அகற்றி அமைக்கப்படும் கட்டிடங்கள் மற்றும் வீதிகள் நகரத்தினை கட்டிடக் காடுகளாக மாற்றி விடுகின்றன.
முல்லைத்தீவு நகரின் மத்தியில் இருந்த ஆலமரம் ஒன்று அழிக்கப்பட்டு அந்த இடம் வெட்டையாக இருக்கின்றது. வீதியோரத்தில் நின்றிருந்த கிளைபரப்பி விருட்சமாக இருந்த மருது மரமொன்றும் கிளைகள் வெட்டப்பட்டு அடி மரம் மட்டும் இப்போது இருக்கின்றது. பட்டுப்போகும் நிலை நோக்கி அது செல்வத்தையும் அவதானிக்க முடிகின்றது.
மரங்களை நாட்டும் போது நிழலை மட்டும் கருத்திலெடுத்து செயற்படும் போக்கில் மாற்றத்தினைக் காணலாம் என எடுத்துரைக்கப்பட்ட போதும் அவை மரநடுகைகளில் ஈடுபடுவோரால் ஊதாசினப்படுத்தப்படுவதாக பொருளாதார துறைசார்ந்த புலமையாளர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் மரங்கள்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண காடுகளை பாதுகாத்ததில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்கு அளப்பரியது.
காடுகளை பயன்படுத்துவதோடு அவற்றை எதிர்காலத்திற்கேற்ப திட்டமிடுவதில் அவர்கள் கூடிய கவனமெடுத்திருந்தனர்.
வீதியோர மரங்களை நாட்டி பராமரித்து வளர்ப்பதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புத்தடிப் பிள்ளையார் கோவில் வரையான வீதியோர மரங்களை அவர்கள் தான் நாட்டி வளர்த்திருந்தனர் என 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான நிகழ்வுகளை வயதானவர்கள் சிலருடன் வீதியோர மரநடுகைகள் தொடர்பில் கேட்ட போது குறிப்பிட்டார்கள்.
முல்லைத்தீவில் பழைய மகாவித்தியாலயத்திலும் முல்லைத்தீவு சந்தியிலும் பெரிய ஆலமரங்கள் நின்றிருந்தன.அவை 2009 இற்கு பிறகு அழிக்கப்பட்டு விட்டன என மேலும் குறிப்பிட்டார்கள்.
வீதியோரங்களிலும் முல்லைத்தீவு கடற்கரையோரங்களிலும் பனை மரங்களையும் நாட்டி வளர்த்து பராமரிப்பதில் அக்கறை காட்டலாம்.அது தமிழர்களின் பண்பாடு, உணவுப் பழக்கத்திலும் தொடர்புபட்டதோடு பனம் சிலாகைகளையும் பெறலாம்.பனை ஒரு கற்பகதரு எனவும் அவர்களில் ஒருவர் தன் எதிர்பார்ப்பையும் குறிப்பிட்டிருந்தார்.