எனது அண்ணன் பதவிக்கு பொருத்தமானவர்: ரோஹித்த ராஜபக்ச பெருமிதம்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாத்திரமல்ல, அரச உயர் அதிகாரிகள் அந்த பதவிகளுக்கு வந்த பின்னர், அவர்களை சுற்றி ஒன்றுக்கூடி இருக்கும் ஒரு சிலர், அவர்கள் மக்களை சந்திக்க வருவதை தடுப்பதாக ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நபர்கள், உயர் பதவிகளில் உள்ளவர்கள் சமூகத்துடன் தொடர்புகளை பேணுவதையும் தடுத்து நிறுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இப்படியான சந்தர்ப்பத்தில் தலைவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் கூறுவது மாத்திரமே கேட்கும்.
இந்த பிரச்சினை தற்போதைய அரசாங்கத்திற்குள் மாத்திரமல்லாது கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கும் இருந்தது எனவும் ரோஹித்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தலைவர்கள் பதவிகளுக்கு வந்த பின்னர், ஜனாதிபதி, பிரதமர் மாத்திரமல்ல, அதிகாரிகளும் உயர் பதவிகளுக்கு வந்த பின்னர், அவர்களை நெருங்கிய ஒரு வட்டம் இருக்கும். அந்த வட்டத்தினர் வெளியில் இருப்பவர்களை பதவிகளில் இருக்கும் நபர்களிடம் நெருங்க விடுவதில்லை.
தொடர்புகளை பேணமுடியாது. சமூகத்துடன் உரையாட சந்தர்ப்பத்தை வழங்குவதில்லை. அப்போது அந்த நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் கூறுவது மாத்திரமே அவர்களுக்கு கேட்கும்.
இது எமது சித்தப்பா, அப்பா, சகோதரர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. கடந்த கால அரசாங்கத்திலும் இப்படி நடந்தன. நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் சரியான தகவல் உள்ளே செல்ல இடமளிப்பதில்லை. உள்ளே இருந்து வெளியில் தகவலை அனுப்பவும் இடமளிப்பதில்லை.
அப்படியான நிலைமையில், சமூகத்தில் என்ன நடக்கின்றது. மக்கள் என்ன நினைக்கின்றது என்பது பற்றிய சரியான புரிதல் கிடைப்பதில்லை. இப்படி புரிதல் இன்றி எமக்கு நாட்டை ஆட்சி செய்யவோ, முன்நோக்கி செல்வதோ கடினம்.
அதேவேளை எனது மூத்த சகோதரர் நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை பற்றி அனுபவமுள்ள, விளையாட்டை அறிந்த விளையாட்டு வீரர். விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவர்.
விளையாட்டுத்துறை அமைச்சு பதவி எனக்கு கிடைத்தால், விளையாட்டு வீரர்களில் மனநிலையை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் எனவும் ரோஹித்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.