37 ஆவது நாளாகவும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபடும் முத்துநகர் விவசாயிகள்
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் 37 ஆவது நாளாகவும் இன்று(23) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த வாரம் திருகோணமலைக்கு வருகை தந்த ஜனாதிபதியை சந்திப்பதற்கு தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குறித்த விவசாயிகள் தெரிவித்தனர்.
முத்துநகர் விவசாயிகள்,தங்களது விவசாய நிலத்தை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
"வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி" எனும் பிரதான சுலோக அட்டையை காட்சிப்படுத்தியவாறு முத்து நகர் விவசாயிகள் தீர்வு வேண்டி போராடி வருகின்றனர்.
பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த காணியை அபகரித்ததால் சுமார் 352 ஏழை விவசாய குடும்பங்கள் நடுத்தெருவில் இறக்கப்பட்டுள்ளனர்.
மன உளைச்சல்
தேசிய மக்கள் சக்தியின் ஆளும்தரப்பு மீது விவசாயிகள் நம்பிக்கையிழந்த நிலையில் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி அன்றாட ஜீவனோபாயம் இழந்த நிலையில் தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்துக்கு நேற்று (18)விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை குறித்த விவசாயிகள் பேரணியாக சென்று சந்திக்கவிருந்த நிலையிலும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.



