மோசமடையும் இலங்கையின் நிலை! - சஜித் விசேட அறிவிப்பு
மிரிஹானவில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கும் நபர்களுக்கு ஆதரவாக 600 சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி என்ற வகையில், தங்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்த அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு ] ஐக்கிய மக்கள் சக்தி துணை நிற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாகப் பாதித்து வருவதாகவும் கூறிய அவர், மக்கள் படும் இன்னல்களை கண்டுகொள்ளாமல் அரசு கண்மூடித்தனமாக உள்ளது என்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி பொதுமக்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும், எனினும், எதிர்க்கட்சிகள் அதற்கு இடமளிக்காது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திறமையற்ற அரசாங்கமும் ஜனாதிபதியும் உடனடியாக தமது பதவிகளை இராஜினாமா செய்து நாட்டை முன்னேற்றக் கூடியவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.