அரச வாகனத்தை அரசுக்கே வாடகைக்கு கொடுத்த முஸ்ஸம்மில்! அரசியல் அவதானிகள் குற்றச்சாட்டு
அரச வளங்கள் மற்றும் பொது நிதியை தவறாக பயன்படுத்துவது சம்பந்தமாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இதுவரை எவரும் குற்றவாளியாக இனங்காணப்படவில்லை. சில நேரம் நீதிமன்றத்தினால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் நபர்களும் உடனடியாக சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலையாகி, மீண்டும் மக்கள் பிரதிநிதிகளாகவும், அரச அதிகாரிகளாகவும் கடமையாற்றி வருகின்றனர்.
தேர்தல்களின் போது இப்படியான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை.
அத்துடன் இப்படியான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வரும் நபர்களும், அரச வளங்களையும் ,பொது நிதியையும் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சியினருக்கும்,எதிர்க்கட்சியினருக்கும் இடையில் இப்படியான பிரச்சினை ஒன்று ஏற்பட்டது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருக்கு நாடாளுமன்றம் வழங்கும் வாகனத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தவறாக பயன்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மில் கூறினார்.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருக்கு வழங்கப்படும் வாகனத்தை வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்துவது அரச வளத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வாகனம் நாடாளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளதுடன், மாதம் தலா ஒரு லட்சத்து 17 ஆயிரம் எரிபொருள் கொடுப்பது மற்றும் பராமரிப்புக்கான பணமும் பெற்றுக்கொள்ளப்படுவதாக முஸ்ஸம்மில் குறிப்பிட்டார்.
எது எப்படி இருந்த போதிலும் அரச வாகனத்தை தவறாக பயன்படுத்துவது மற்றும் பொது நிதியை தவறாக பயன்படுத்துவது சம்பந்தமாக முஸ்ஸம்மிலுக்கு பல வருட அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தை பயன்படுத்தி அவர் எதிர்க்கட்சியினரிடம் இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கலாம்.
முஸ்ஸம்மில் 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, அவருக்குரிய வாகனத்திற்கு மேலதிகமாக ஜனாதிபதி செயலகமும் வாகனம் ஒன்றை வழங்கி இருந்தது. 2010 ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை.
எனினும் ஜனாதிபதி செயலகம் வழங்கிய வாகனத்தை அவர் தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தார். இதன் பின்னர் முஸ்ஸம்மில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியை பயன்படுத்தி ஜனாதிபதி செயலகம் வழங்கியிருந்த வாகனத்தை வாடகை அடிப்படையில் அவர் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கி இருந்தார்.
தனது பயன்பாட்டுக்காக அவ்வாறு வாடகைக்கு வழங்கியுள்ளார். சரளமாக கூறுவதென்றால், அரச வாகனத்தை அரசாங்கத்திற்கே அவர் வாடகைக்கு வழங்கி இருந்தார். அதுவும் தனது மனைவியின் பெயரில் அதனை வாடகைக்கு வழங்கி இருந்தார். இதனை தவிர அரச பொறியியல் கூட்டுத்தாபனமும் முஸ்ஸம்மிலுக்கு வாகனம் ஒன்றை வழங்கி இருந்தது.
இதன் மூலம் 62 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக முஸ்ஸம்மில் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.
மனைவியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட நல்லாட்சி அரசாங்கததின் அமைச்சர்களின் உதவியுடன் அவர் தப்பித்தார்.
அன்று அரச வாகனத்தை தவறாக பயன்படுத்தி பணத்தை மோசடி செய்த அதே முஸ்ஸம்மில், நேற்று நாடாளுமன்றத்தில் சிங்கம் போல் கர்ஜித்து அரச வாகனத்தை தவறாக பயன்படுத்துவது குறித்து எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்தினார்.
எது எப்படி இருந்த போதிலும் முஸ்ஸம்மிலின் பழைய வாகன மோசடி தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்டும் அளவுக்கு அறிவுள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ,ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் நேற்று இருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.