முஸ்லிம்- தமிழ் மக்கள் இடையே முறுகல் நிலையை ஏற்படுத்த முயற்சி! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சமூக வலைத்தளங்கள் வாயிலாக அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம், தமிழ் மக்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முன்னிற்பதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக களுவாஞ்சிகுடி வர்த்தகசமூக நலம்புரிச் சங்கத்தின் மனோரஞ்சிதராஜா ரமணன் தெரிவித்தார்.
இன்று (22.09.2026) களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை முன்னால் ஒன்றுகூடி அனோஜனின் விடுதலை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களது சகோதரர் அனோஜன் என்பவர் சவுதியில் தண்டனைக்கு உள்ளாகி இருக்கின்றார். சமூக ஊடகம் வாயிலாக கருத்தை முன்வைத்து அது ஒரு மதத்தை இழிவு படுத்தியதாக கருதப்பட்டு அந்த குற்றம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
மரண தண்டனை
அவர் மரண தண்டனையை பெற்றிருப்பதாக நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இலங்கை அரசாங்கம் அது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுத்து அவரை எனது நாட்டிற்கு மீள பெறுவதற்கான செயல்பாடுகளை செய்வதாக அறிகின்றோம்.

எனது மக்கள் சார்பில் நாங்கள் கூறிக் கொள்வது இலங்கை எனும் நாட்டில் எந்தவித இன மத முரண்பாடுகளுமான கருத்துக்களை எவரும் தயவு செய்து முன்வைக்க வேண்டாம்.
இதற்கான காரணம் எமது முதற்கடவுள் சிவபெருமான், சிவலிங்கத்தை மிகவும் இழிவாக சமூக வலைத்தளத்தில் சித்தரித்து எழுதிய வசனத்திற்கு அனோஜன் என்பவர் தனது கருத்தை பதிலீடாக எழுதியதை முன்னிட்டு மிகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இவை இரண்டுமே மிகவும் தவறான விடயங்களாகும்.
முறுகல் நிலை
இது இன மதங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும். இதனை உதாரணமாக எடுத்துக் கொண்டு எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஊடகங்களோ சமூக வலைத்தளங்களோ நல்ல விடயங்களை முன்கொண்டு செல்வதற்காகதான் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை வைத்துக் கொண்டு மதங்கள் இனங்களுக்கு இடையே முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து முறுகல் நிலையை ஏற்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்டார்.