இசைஞானி இளையராஜாவின் கொழும்பு இசைநிகழ்ச்சி: நுழைவுச் சீட்டுக்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்
கடந்த மாதம் நடைபெறவிருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி சீட்டுக்கள் பெற்றுக்கொண்டவர்கள் அதற்கான பணத்தை மீள பெற்றுக்கொள்ள விரும்பினால் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிக்கு முன்பு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில்,
"2024 ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடக்கவிருந்த இசைஞானி இளையராஜாவின் "என்றும் ராஜா ராஜாதான் " இசை நிகழ்ச்சி, அவரது புதல்வி பாவதாரணியின் திடீர் மறைவு காரணமாக பிற்போடப்பட்டதை, நீங்கள் அறிவீர்கள்.
நுழைவு சீட்டுக்கள்
நிகழ்ச்சியின் புதிய திகதிகளை 2024 பெப்ரவரி 1 ஆம் திகதி அறியத்தந்திருந்தோம். அதன்படி, பிற்போடப்பட்ட இசைஞானி இளையராஜாவின் "என்றும் ராஜா ராஜா தான்" இசைநிகழ்ச்சி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் 2024 ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறும் என்பதையும், ஏற்கனவே கொள்வனவு செய்த நிகழ்ச்சிக்கான அனுமதிசீட்டுக்களை, புதிய திகதிகளில் பயன் படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் அறியத்தந்திருந்தோம்.
அதேசமயம், அறிவிக்கப்பட்ட புதிய திகதிகளில் பல்வேறுபட்ட காரணங்களால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்கள் பணத்தை மீளப்பெறுவதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம்.
அதற்கமைய, இதுவரை ரூபா பத்து இலட்சம் வரையான அனுமதிசீட்டுக்களுக்கான பணம் ரசிகர்களுக்கு மீள வழங்கப் பட்டிருக்கின்றது.
நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டு 1 மாதம் கடந்த நிலையில், ரசிகர்கள் நுழைவுச் சீட்டுகளுக்கான பணத்தை மீள பெறவிரும்பினால் 2024, மார்ச் மாதம் 5 ஆம் திகதிக்கு முன்பு நீங்கள் நுழைவுசீட்டுக்களை பெற்றுக்கொண்ட முகவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
2024, மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர் அனுமதிசீட்டுக்களுக்கான பணம் மீள வழங்கப்பட மாட்டாது. ஆனால் ரசிகர்கள் ஏற்கனவே கொள்வனவு செய்த ஜனவரி 27, 28 நுழைவுசீட்டுக்களை முறையே ஏப்ரல் 20, 21 நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கொள்கின்றோம்.
எதிர்வரும் ஏப்ரல் 20, மற்றும் 21 ஆம் திகதிகளில் நிகழ்ச்சிக்கான தனது வருகையை இசைஞானி இளையராஜா அவர்கள் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், நிகழ்ச்சிக்கான சகல ஏற்பாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சிலதினங்களில் நிகழ்ச்சிக்கான பத்திரிக்கை, வானொலி மற்றும் இணையதள விளம்பரங்கள் ஆரம்பமாகவுள்ளன .
இசைஞானியின் இசை மெட்டுக்களை நேரடியாக கண்டும், கேட்டும், நீங்கள் இதுவரை வாழ்நாளில் அனுபவித்திராத, உங்களை பரவசத்தில் ஆழ்த்தும் ஒரு புதிய அனுபவத்தை பெற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இசை நிகழ்ச்சிக்கு லங்காசிறி ஊடக வலையமைப்பு அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |