கிளிநொச்சி அக்கராயன் குளம் வான் பாய்வதால் அக்கராயன், முறிகண்டி வீதி போக்குவரத்து துண்டிப்பு
கிளிநொச்சி அக்கராயன் குளம் வான் பாய்வதால் அக்கராயன், முறிகண்டி வீதி ஊடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப்புறத்தில் அமைந்துள்ள அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து குளத்தின் வான் வழியாக ஏழு அங்குலத்துக்கு மேல் அந்த நீர் வெளியேறுவதனால் வீதியின் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி படையினர் வீதியின் இரு மருங்கிலும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி அக்கராயன் குளம் தொடர்ந்து வான் பாய்வதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து 7 அங்குலத்துக்கு மேல் வான் பாய்கின்றது. இதனால் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன.
குறிப்பாக அக்கராயன் குளத்தில் ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
இதேவேளை அக்கராயன் குளத்தின் கீழான காலபோக நெற்செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நோய்த்தாக்கம் மற்றும் அறுவடையின் போதான தொடர் மழை என்பவற்றினால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாரிய நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் கீழ் உள்ள 3417 ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது நெல் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அக்கராயன் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கை அறுவடை கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய தொடர் மழை காரணமாக அறுவடைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக, அறுவடை செய்யும் நெல்லை உரிய விலைகளில் விற்பனை செய்யவோ அல்லது உலரவிட்டு களஞ்சியப்படுத்தவோ முடியாத நிலையில் குறைந்த விலைகளில் நெல்லை விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த மாதம் நெற்பயிரில் ஏற்பட்ட பாரிய நோய்த்தாக்கம் காரணமாக எதிர்பார்த்த விளைச்சல்கள் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.





