டெங்குவால் இளம் தாய் உயிரிழப்பு: வைத்தியசாலை நிர்வாகம் மீது கணவர் கடும் குற்றச்சாட்டு
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த இளம் தாயின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர், பிள்ளையை பிரசவித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் நேற்று(01.07.2026) மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே இளம் தாயின் கணவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு நோய் தாக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனது மனைவியின் பிரசவத்தின் போது நேர்ந்த மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம். என்னுடைய மனைவி ஜெயப்பிரியாவுக்கு காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளே, தனியார் துறையில் தங்களைக் கவனித்து வந்த மகப்பேற்று மருத்துவரான டாக்டர் சரவணனைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றோம்.

அவரது அறிவுறுத்தலின்படி மட்டக்களப்பிலுள்ள கோப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அது 'சாதாரண காய்ச்சல்' என்று கூறி இரண்டு மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பினார்கள்.
ஆனால், அன்றிரவு காய்ச்சல் தீவிரமடைந்ததை அடுத்து, மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, அரசு மருத்துவமனையின் 7ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்டு, அங்கும் பலமுறை இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன்போதும், அங்குள்ள மருத்துவர்கள் சாதாரண காய்ச்சல் என்று தான் கூறினார்கள்.
காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில், குடும்பத்தினருக்கு எந்தவித அறிவித்தலும் இன்றி அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு “டெங்கு அன்டிஜன்” பரிசோதனை செய்வதற்கான வசதிகள் அல்லது இயந்திரங்கள் இல்லை எனக் கூறி, வெளி ஆய்வகத்தில் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர்கள் கூறினார்கள்.
கணவரின் குற்றச்சாட்டு
இதனையடுத்து, பரிசோதனை செய்த பொழுது டெங்கு நோய் இருப்பது உறுதிச் செய்யப்பட்டு, குழந்தையும் பிறந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 21ஆம் திகதி மனைவி நன்றாக குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அன்றிரவு திடீரென அவருக்குக் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தினரிடம் எவ்வித அனுமதியோ, ஒப்புதல் கையெழுத்தோ பெறாமல் நள்ளிரவில் மருத்துவர்களால் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் காலையில் குடும்பத்தினர் பார்க்கச் சென்றபோதே இந்த விபரம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் பெண்ணின் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கி, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.