நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்த பொலிஸார் புதிய நடவடிக்கை
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் கொள்ளைகளுக்கு மத்தியில், குறிப்பாக தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கையாள்வதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
இலங்கையின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட சில பகுதிகளை தென் மற்றும் மேல் மாகாணங்கள் கொண்டிருக்கின்றன. அண்மைய மாதங்களில் குற்றங்களுக்கான முக்கிய தளங்களாக அவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன, இதன் விளைவாக குறிப்பிடத்தக்க உயிர் இழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இன்று வரை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக, போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்கு மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கைக்குள் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் விரிவான தரவுத்தளத்தை இந்தக் குழு தொகுத்துள்ளது.
குழுவின் புள்ளிவிபரங்களின்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பில் மேல் மற்றும் தென் மாகாணங்கள் முதன்மையானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில், மேல் மாகாணத்தில் ஐந்து ஆயுததாரிகள் உட்பட மொத்தம் 46 சந்தேகநபர்களும், தென் மாகாணத்தில் இரண்டு துப்பாக்கிதாரிகள் உட்பட 19 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், பொலிஸாருடனான மோதலின் போது மூன்று துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் குழு நிறுவப்பட்டதிலிருந்து மொத்தம் 139 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன, தென் மாகாணத்தில் 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 96 துப்பாக்கிகள், ஐந்து T56 துப்பாக்கிகள், இரண்டு 81 ,84 ஆயுதங்கள், 12 கைத்துப்பாக்கிகள், ஆறு சுழல் துப்பாக்கிகள் மற்றும் 18 ஏனைய துப்பாக்கிகள் இதில் அடங்குகின்றன.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.