அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர அரசியல் செயற்பாட்டாளரும், ஐசக் அக்ரீ யூத ஜெப ஆலயத்தின் பொறுப்பாளருமான சமந்தா வோல் (40வயது) கொலை செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் அமெரிக்கா முழுவதும் யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் குறித்த கொலை இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,
தீவிர விசாரணை
“கொலையில் பதிலில்லாத பல கேள்விகள் இருக்கின்றன. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். கிடைக்கும் அனைத்து உண்மைகளும் மதிப்பாய்வு செய்யப்படும் வரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பது முக்கியம்.
இறந்தவரின் உடலில் பல கத்திக் காயங்கள் இருக்கின்றன. குற்றம் நடந்ததாக நம்பப்படும் இடத்தில் இருந்த இரத்தத் தடயங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொலைக்கான நோக்கம் குறித்து அறிந்துகொள்ள FBI புலனாய்வு அதிகாரிகளிடம் உதவி கேட்டிருக்கிறோம்.
இறந்தவர் அமெரிக்க காங்கிரஸ் கட்சிக்காகவும், மிச்சிகன் அட்டர்னி ஜெனரல் டானா நெசெலின் பிரசாரத்திலும் பணியாற்றியிருக்கிறார். அதனால் மேலதிக தகவல்களுக்காக விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 16ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோவுக்கு அருகில் இருக்கும் ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த சுபுர்பன் என்ற யூதர், 6 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொலைசெய்து, சிறுவனின் தாயையும் கத்தியால் தாக்கியதாகக் கைதுசெய்யப்பட்டது சர்வதேச அளவில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.