தவிசாளர் மீது தாக்குதல் நடத்திய மாநகர சபை உறுப்பினர் தப்பியோட்டம் (Photos)
அக்கரைப்பற்றிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கூட்டத்தில் மத்தியஸ்தர் சபை தவிசாளர் மீது முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் (08.07.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மத்தியஸ்தர் சபை தவிசாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிதி கணக்கு அறிக்கை
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அபிவிருத்தி சங்க கூட்டம் சம்பவ தினமான நேற்று இடம்பெற்றுள்ளது.
இதில், திடீர் மரண விசாரணை அதிகாரியும் மத்தியஸ்த சபை தவிசாளருமான சீனி முகமது தல்ஹா கலந்து கொண்டு இந்த பாடசாலையில் 1800 மாணவர்களின் பெற்றோர்கள் இருக்கும் நிலையில், இந்த கூட்டத்திற்கு 35 பேர் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர் என்றார்.
இந்தக் கூட்டத்திற்கு சங்க பொருளாளர் சமூகமளிக்காத நிலையில், நிதி கணக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியாது என்பதுடன், அதிபருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பாகக் கல்வி அமைச்சில் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த கூட்டம் நடத்துவது சட்டத்துக்கு முரணானது எனக் கருத்து தெரிவித்தார்.
முறைப்பாடு தொடர்பான விசாரணை
இதன்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் மத்தியஸ்தர், சபை தவிசாளர் மீது தாக்குதல் நடத்தியதையதுடன் அவர் காயமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்று மத்தியஸ்த சபையில் கடன் கொடுக்கல் வாங்கல் சம்மதமான முறைப்பாடு தொடர்பான விசாரணை கடந்த 2ஆம் திகதி இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, எதிராளி மீது முறைப்பாட்டாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் ஒருவரும் அவரது மகனான சட்டத்தரணி ஒருவர் உட்பட 3 பேரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சம்பவத்தின் எதிரொளியாக மத்தியஸ்தர் சபை தவிசாளர் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில் தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் நகரசபை உறுப்பினர் தலைமறைவாகியுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |