மணிவண்ணன் சமர்ப்பித்த யாழ். மாநகர சபை 'பட்ஜட்' நிறைவேற்றம்!
யாழ்ப்பாண மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்தனர்.
தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகப் பதவி வகித்த இ.ஆனோல்ட் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி இழந்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற மேயர் தெரிவில் இ.ஆனோல்ட் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வி.மணிவண்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் வி.மணிவண்ணன் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அதையடுத்து அவரால் இன்று புதிய வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் என 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணியின் ஓர் உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
முன்னாள் மேயரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இ.ஆனோல்ட் இன்று சபைக்கு வரவில்லை.
இதற்கமைய யாழ். மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam