பெக்கோ சமனுக்கு பெரும் அதிர்ச்சி! ரூ.40 மில்லியன் சொத்துக்களை முடக்க அதிரடி உத்தரவு
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்கவுக்கு சொந்தமானவை என சந்தேகிக்கப்படும் சுமார் 40மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் முடக்கம்
முடக்கப்பட்ட சொத்துக்களில் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதிசொகுசு பென்ஸ் ரக கார் ஒன்றும், இரண்டு தனியார் வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வரும் தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நிலையான வைப்புக் கணக்குகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சொத்துக்கள் நிமந்தி பொன்சேகா என்ற பெண்ணின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சி.டபிள்யூ. விக்ரமசேகரவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.