தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நான்காம் நாளாக அனுஷ்டிப்பு..!
தமிழினப்படுகொலை வாரத்தின் நான்காம் நாளான இன்று(14.05.2026) தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி, அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, முல்லைத்தீவு - விசுவமடு, றெட்பானா பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், தேராவில் மற்றும் இளங்கோபுர மக்களின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு வலி நிறைந்த வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் எனும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.


இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை - 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் அதிகாரிகள்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேலதிக தகவல் - ஷான்
நெல்லியடி
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று(13.05.2026) நெல்லியடி நகரப் பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினத்தின் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக பொது ஈகை சுடரினை ஏற்றிவைக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - எரிமலை
திருகோணமலை - மூதூர்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மூதூர், அம்மன்நகர் பகுதியில் நேற்று(13.05.2026) மிக உணர்ச்சிகரமான முறையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை நினைவேந்தல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து பொதுச்சுடர் மற்றும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மலர் தூவி, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

போர்க்காலத் துயரத்தையும், மக்களின் பசியையும் பறைசாற்றும் அடையாளமாக அமைந்த “முள்ளிவாய்க்கால் கஞ்சி” தயாரிக்கப்பட்டு, அங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சிறுவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது உணர்வுப்பூர்வமான அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

மேலதிக தகவல் - கியாஸ் ச(f)பி
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி இன்று(14.05.2026) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்ற நாளில் ஒருவேளை உணவுக்காக தவித்தவர்களின் உயிரை காப்பதற்காக உயிர் காத்த நினைவு கஞ்சி வழங்கப்பட்டிருந்தது.
மேலதிக தகவல் - தேவந்தன்
கிளிநொச்சி - பொதுச் சந்தை
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் இன்று(14.05.2026) நடைபெற்றுள்ளது.
மேலதிக தகவல் - தேவந்தன்
கமராக்களையும் பேனாக்களையும் ஆயுதமாகக் கொண்டு களமிரங்கிய ஊடகவியலாளர்களின் உயிர் தியாகம்
முள்ளிவாய்க்கால் மண்ணில் எமது மக்கள் எதிர்கொண்ட கொடூரமான இனப்படுகொலையைத் தனது கண்களால் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ஊடகத்துறை மாமனிதர்களை இந்த நாளில் நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு தற்செயலான நிகழ்வல்ல, அது அப்போதைய அரசால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான இனப்படுகொலை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது மக்களின் கதறல்களும், காயங்களும் மறைக்கப்பட முயன்றபோது, அதனைத் தடுத்து உலகிற்கு உண்மைகளை உரக்கச் சொன்னவர்கள் எமது ஊடகவியலாளர்கள்.
தங்கள் சொந்தக் குடும்பங்களின் பாதுகாப்பையும், உயிரையும் பொருட்படுத்தாது, எமது மக்களின் அவலங்களை உலகம் அறியச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அவர்கள் செயற்பட்டிருந்தனர்.
கமராக்களையும் பேனாக்களையும் ஆயுதமாகக் கொண்டு களத்தில் நின்ற அந்த மாமனிதர்களில் பலர், முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே வீர மரணமடைந்தனர்.இவர்களின் இந்த செயல் மறக்க முடியாத தியாகம் ஆகும்.
மக்களின் சொல்லொணாத் துயரங்களை உலக நாடுகளின் பார்வைக்குக் கொண்டு சென்றதில் இவர்களின் பங்கு அளப்பரியது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் எங்களை விட்டு பிரிந்து சென்ற அந்த ஊடகவியலாளர்களின் கனவுகளைச் சுமந்தவர்களாக, இந்த மண்ணில் நாம் வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம்.
ஊடகத்துறை என்பது மக்களின் தேவைகளையும், குறைகளையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் புனிதமான பணியாகும்.
"எமது இனத்தின் விடுதலையையும், உண்மைகளையும் ஆவணப்படுத்திய அந்த உன்னத ஊடகப் போராளிகளை இந்த நாளில் நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்துவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - பாஸ்கரன்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு இளைஞர்களால் இன்றைய தினம்(14.05.2026) வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவு நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.
நினைவேந்தலில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் இரண்டு நிமிடங்கள் அகவணக்கச் செலுத்தப்பட்டள்ளது.
இதனைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் இனப்படு கொலையை நினைவுபடுத்தும் விதமாக உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடமராட்சிக் கிழக்கு இளைஞர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன், முன்னாள் உறுப்பினர் ஆனந்தராஜா சுரேஷ்குமார், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் முரளீதாரன், உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - காந்தீபன்
மன்னார் - நானாட்டான்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(14.05.2026) வியாழக்கிழமை மன்னார் நானாட்டான் பகுதியில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது மத தலைவர்கள் மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ஆஷிக்