மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதினை தொடர்ந்து முள்ளிவாய்க்காலினை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டதுடன், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இதன்போது நிகழ்வில் மறத்தமிழர் கட்சியின் இணைப்பாளர் ஆதம்குணா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


முதலாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
இதற்கமைய, தமிழின படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழ் அரசு கட்சியின் குருமன்வெளி வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் இன்று (18.05.2026) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் - மே 18
குருமன்வெளி வட்டார உறுப்பினர் அ.பத்மதேவு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இறுதிக்கட்டப்போரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் "முள்ளிவாய்க்கால் நினைவு நாள் - மே 18", "தமிழின அழிப்பு நாள்" ஆகிய வாசகங்கள் தாங்கிய பிரதான பதாகை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் பிரதான அங்கமாக, ஈழப்போராட்டத்தில் தனது காலினை இழந்த மாற்றுத்திறனாளி போராளியான கோபாலசிங்கத்தினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகளினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளன.
மரணத்தின் விளிம்பு
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், உபதவிசாளர் அ.விசிகரன், போரதீவுப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றி, மரணத்தின் விளிம்பில் உப்புக்கஞ்சியை மட்டும் அருந்தி உயிர் தப்பிய அவல நிலையை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் "முள்ளிவாய்க்கால் கஞ்சி" வழங்கும் நிகழ்வும் இங்கு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
"உயிரிழந்த உறவுகளின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்ற உறுதியுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.
தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE



காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam