முள்ளிவாய்க்கால் வார ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் (Video)
யாழ்ப்பாணம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இன்று (16.05.2023) நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் பொழுது மாணவர்களால் உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
செய்தி- கஜிந்தன்
முகாமைத்துவ பீடம்
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது முள்ளிவாய்க்கால் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையில் உயிர்நீத்த உறவுகளிற்கான அஞ்சலி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் மூன்று மொழிகளிலான துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இதேவேளை அதிகளவான சிங்கள மாணவர்களும் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
செய்தி-தீபன்
திருகோணமலை
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நிகழ்வு திருக்கோணமலை தம்பலகாமம் கிராமத்தில் இன்றைய தினம்(16.05.2023) இடம்பெற்றுள்ளது.
அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு நினைவு கூர்ந்தார்கள். திருகோணமலை அனைத்து பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நினைவு கூரப்படுகின்றது.
முல்லைத்தீவு
முள்ளிவாய்க்கால் படுகொலையின் முன்னிட்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவில் இருந்து புறப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்த்தி மே 18 அன்று புதுக்குடியிருப்பு ஊடாக முள்ளிவாய்க்காலை சென்றடைந்து மே 18 புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துக்கமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
புதுக்குடியிருப்பு வர்ததக சங்க நிலப்பரப்பிற்கு உட்பட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விற்கு ஆதாரவு தெரிவிக்கப்படும் என்று புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் ந.நவநீதன் தெரிவித்துள்ளார்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழின படுகொலை நாள் நினைவேந்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் தமிழின படுகொலை நினைவு நாள் மே-18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடொ மற்றும் மெசிமோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
யாழ்.பருத்திதுறை
தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு நேற்று(16.05.2023) பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக இனப் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக சுடர் ஏற்றி இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் இருந்த புறப்பட்டு குறித்த நினைவேந்தல் இடத்திற்கு வருகைதந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



