முள்ளிவாய்க்காலில் குழந்தையை புதைத்த இடத்தில் பெற்றோர் அஞ்சலி (video)
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது 1வயதும் 8மாதமுமாகிய குழந்தையை இழந்த பெற்றோரால் இன்று (15.05.2023) முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு இன்று சென்ற பெற்றோர், இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்து, அவ்விடத்திலயே புதைக்கப்பட்ட குழந்தையின் சமாதியில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள்
2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி 1வயதும் 8 மாதமுடைய எனது மகள் இலங்கை இராணுவத்தினருடைய எறிகணை வீச்சிலே காயமடைந்து மரணத்தை தழுவினார்.
இந்நாளில் அவரை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருக்கிறோம்.
யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் உறவினர்கள் எங்களை போன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
எறிகணை வீச்சு
மே மாதம் 15 ஆம் திகதி இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சினால் நானும் மனைவியும் படுகாயமடைந்தோம், இராணுவத்தினரின் எறிகணை நாங்கள் இருந்த பதுங்கு குழிக்குள்ளயே விழுந்து வெடித்தது.
இவ்வாறு வீசப்பட்ட எறிகணை வீச்சில் எனது வலதுகாலையும் இடது கையையும் இழந்ததுடன் மனைவியும் படுகாயமடைந்தார்.
இதன் போது 1வயதும் 8 மாதமுடைய எங்களுடைய மகள் உயிரிழந்தார்.
இன்று அவர் இறந்த நாள் என்பதினால் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து அவரை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் குழந்தையின் தாயாரிடம் கருத்து கேட்ட போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகத்தினால் அவர் கண்ணீர் சொரிந்து அழுதார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |