விடுதலைப் புலிகளின் பொருட்களைத்தேடி இடம்பெற்ற அகழ்வுப்பணி: நீதிபதி பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப்
புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடிகடந்த மூன்று
நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகள் நீதிபதி உத்தரவிற்கு அமைய நிறுத்தப்பட்டு நிறைவுக்கு வந்துள்ளது.
இவ்வாறு இடம்பெற அகழ்வுப்பணிகளில் எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில், குறித்த அகழ்வுப்பணிகள் பெருத்த ஏமாற்றத்துடன் நேற்று(27.09.2023) முடிவிற்கு வந்துள்ளது.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால், மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகள் காலத்தில் தங்கம், ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் புதைக்கப்பட்டதாக வவுனியாவடக்கு - நெடுங்கேணி, சின்னடம்பன் பகுதியைச்சேர்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஜெயசிங்கம் சஞ்சீவன் என்பவர் அம்பாறை பொலிஸ் தலைமை காரியாலயத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதற்கமை அம்பாறை பொலிஸ் தலைமைக்காரியாலயப் பொலிஸார் இந்த விடயத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு கொண்டுசென்று அகழ்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர்.
அகழ்வுப்பணிகள்
அதனைத் தொடர்ந்து இந்த விடயம் முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டு, முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியோடு குறித்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன்படி கடந்த (25.09.2023)ஆம் திகதியிலிருந்து .குறித்த இடத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஜெயசிங்கம் சஞ்சீவன் என்னும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளி அகழ்வுப்பணிக்கென மேலதிகமாக ஒருமணிநேரம் வழங்குமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபனிடம் கோரியநிலையில், மேலதிகமாக ஒருமணி நேரம் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு நீதிபதி அனுமதித்திருந்தார்.
நீதிபதி உத்தரவு
இதனை தொடர்ந்து மேலதிகமாக இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின்போதும் எவ்வித தங்கங்களோ, ஆயுதங்களோ இனங்காணப்படாத நிலையில் அகழ்வுப்பணிகளை நிறுத்தி, அகழப்பட்ட குழியை மூடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமை பெருத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற அகழ்வுப்பணிகள், ஏமாற்றத்துடன் நிறைவிற்கு வந்துள்ளது. குறித்த அகழ்வுப் பணியின்போது 13அடி, பத்து அங்குலம் ஆழமானதும், 17 மீற்றர் அகலமானதுமான குழி தோண்டப்பட்டதில் குறித்த பகுதியிலிருந்த ஆலமரம், பனைமரம், நாவல் மரம் உள்ளிட்ட பல மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் இவ்வாறு அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற குறித்த பகுதியில், அனுமதியின்றி அகழ்வுகளை மேற்கொள்வதற்கு பலதடவைகள் முயற்சிகள் இடம்பெற்றதாகவும், அவ்வாறு முயற்சி மேற்கொண்டர்களை பொலிஸார் கைது செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |