கனடாவின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்: இந்தியாவை மறைமுகமாக சாடும் கனேடிய தூதர்
வெளிநாட்டு தலையீடுகளால் கனடாவின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக ஐ.நா பொதுச்சபையில் கனேடிய தூதர் ராபர்ட் ரே தெரிவித்துள்ளார்.
கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்கு சம்பந்தம் இருப்பதாக கனடா அரசு சமீபத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு உருவானதுடன், இருநாடுகளும் அவர்களது தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது மற்றும் விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதற்கிடையில் ஐ.நா பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, கனடாவில் நடந்த படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றம், இது தொடர்பான விவரங்களை கனடா அரசுக்கு இந்தியாவின் மத்திய அரசு பகிர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்
இந்நிலையில் நேற்று ஐ.நாவின் பொது சபையில் பேசிய கனேடிய தூதர் ராபர்ட் ரே, வெளிநாடுகளின் தலையீடுகளால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இதனால் தற்போது சுதந்திரம் மற்றும் ஜனநாயக சமூகம் குறித்து பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும் இரு நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதிமுறைகளை வகுக்க முடியாது, பொதுவான விதிகளை பின்பற்றாவிட்டால் திறந்த மற்றும் சுதந்திரமான சமூகங்களை இவை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டு கனேடிய தூதர் ராபர்ட் ரே தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |