தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை: யாழ். பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கை நேற்று(17.05.2024) வெளியிடப்பட்டுள்ளது.
“இறுதிக்கட்ட ஈழப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு - கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணவெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் பொலிஸார், இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்புக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டு நினைவு கூறும் உரிமைகள் மறுக்கப்படும் வன்செயல்கள் அரங்கேறி வருகின்றமையை மாணவர் சமூகமாக கூர்ந்து நோக்குகின்றோம்.
திருகோணமலை சேனையூர் நடவடிக்கை
அண்மையில் திருகோணமலை சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினைப் பரிமாறி போரில் இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நினைவு கூர்ந்த மக்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கிய பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியும் உள்ளன.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பென்பது ஆள்புல மற்றும் குடிசன ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகள் படைத்தரப்புக்களினால் கண்காணிப்புக்கள், அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கப்படுவதோடு, அவற்றினைத் தடுக்கும் செயற்பாடுகளில் தீவிரத் தன்மையுடன் ஈடுபடுகின்றமையினை அண்மைக்காலங்களில் நோக்கக் கூடியதாகவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |