இரண்டாவது நாளாக பறிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டு கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
இறுதி யுத்தக் காலத்தில் திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் என மக்களுக்கு உணவு, மருந்து என எதுவுமே கிடைக்கப்பெறவில்லை.
அந்த நேரத்தில், மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
முள்ளியவளை ஐயனார் குடியிருப்பு
அந்தவகையில், தமிழினப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான இன்றையதினம் (13.05.2024) முல்லைத்தீவு முள்ளியவளை ஐயனார் குடியிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.
ஐயனார் குடியிருப்பு இளைஞர் விளையாட்டு கழக ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது, அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி - சதீஷ் மற்றும் கீதன்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது இடம்பெற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வானது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது.
செய்தி - தீபன்
சாவகச்சேரியில் கஞ்சி விநியோகம்
தென்மராட்சியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும் இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
இதன்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கஜிந்தன் மற்றும் தீபன்
அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற கஞ்சி வழங்கல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று யாழ் தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை இடம்பெற்ற இடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
செய்தி - தீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் இரண்டாவது நாளாகவும் இன்று நடைபெற்றது.
இன்றைய தினம் மட்டக்களப்பு பனிச்சையடியில் உள்ள படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியருகே நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவில் சமூக
செயற்பாட்டாளர் வி.லவகுமார்,இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணியின்
செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |